புதைகுழிக்குள்
போகும் மனிதன் உன்
புகழ்மொழிகளைக் கேட்கப்
போவதில்லை
இறுக்கமாய் இருந்தவனே
இப்போது
உன் கண்களை வற்புறுத்தி
வடிக்கும் கண்ணீர்
தொடுமா அவன் இதயத்தை?
நட்பால் உன்னை
அவன் மனத்தில் நட்டுவைக்கத்
தயங்கினாய்
இப்போது நீ கையிலேந்தி வந்த
மாலையை அவன்
கண்திறந்து பார்ப்பானா?
அன்போடுநீ
அவன் தோளில் கைபோட்டதில்லை
அவன் உடல் சுமக்க இப்போது
தோள்கொடுக்க வந்துள்ளாய்.
முள்காட்டில்
அவன் அன்புக்கு அர்த்தம் வளர்த்தாய்
அவன்சொல்லுக்கு ஐயம்புகட்டினாய்
அவன்செயல்களுக்குக்
கள்ளிப்பால் ஊட்டினாய்
இப்போது இடுகாடுவரை
எதற்கு நடந்து வருகி றாய்?
வாடகைத்தாய்
வயிறுகள் சந்தைக்கு வந்தததுபோல்
வாடகை அன்பு வாடகைப் பாசம்
வாடகைப் புன்னகை இன்னும்
வரவில்லை நண்பனே!
அவன் இறப்பில்
அப்படி என்ன ஓர் உரிமைஆவணம்
அவன் அன்பின்மீதாக உனக்கு
வேண்டும்?
அப்படி என்ன உரிமை?
________________________________________________________________
ஈரோடு தமிழன்பன் அவர்களே.
________________________________________________
சொற்கீரன்
அது எப்படி
இப்படி
சொற்களுக்குள் இத்தனை
நுட்ப விஞ்ஞானத்தை
பதியம் போடுகிறீர்கள்?
உங்கள் எழுத்துக்கள் எழுத்துக்கள் இல்லை.
அவை
உங்கள் இதயம் பிணைத்த நண்பர்கள்
என்று புரிகிறது.
இறந்தவனுக்கும்
இருப்பவனுக்கும்
இடையே இருப்பது
ஒரு மெல்லிய கோடா?
இல்லை
சவ்வுப்படலமா?
ஒரு வேளை இதைத்தான்
மனப்பால் ஆக்கி
அப்புறம் அதை பாற்கடல் ஆக்கி
அதில் பாம்புப்படுக்கைப்போட்டு
படுத்துக்கொண்டிருப்பவனை
பற்றிக்கொண்டு இருக்கிறோமோ?
இந்தக்கற்பனையெல்லாம்
இப்போது எந்த வாரண்டியையும் காட்டாமல்
எரிந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும்
முறைத்துப்பார்த்து விட்டுப்
போனாலும்
முறுவல் காட்டிப்போனாலும்
அவனுக்கும்
எனக்கும்
யார் இப்படி
அன்பின் "செங்கடல் பிளந்து"
தேவ வசனங்களின் ஹாலுசினேஷனை
அரங்கேற்றிக்கொண்டிருப்பது?
மயிரிழைக்குள் சுரங்கப்பாதை வைத்து
மெட்ரோ ரயில் ஓட்டிக்கொண்டிருக்கிறது
விஞ்ஞானம்.
கேட்டால் என்டாங்கில்மென்ட் என்று
குவாண்டம் நுண்கணிதம் காட்டுகிறது.
இருப்பினும் வாடகைக்கும்
செயற்கை நியூரான்கள் மூலம்
உணர்ச்சிக்கு வாய்க்கால் வெட்டித்தர
தயார் என்கிறது "ஆராய்ச்சித்தினவு" எடுத்த
டாலர்கள்!
உங்கள் கவிதைகளின் தோட்டத்தில்
ஈடன் தோட்டத்துப் பாம்புகள் முதல்
உளவியலின் ஒரு "சோசியல் ஃப்ராய்டிஸம்"
வரை
வேர்த்தூவிக்கள் படர்த்துகின்றன.
மிகவும் அருமை
என்று ஒரு முற்றுப்புள்ளியோடு
என்னால் நிறுத்திக்கொள்ள முடியவில்லை.
____________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக