ஞாயிறு, 23 ஜூன், 2024

குரல்

 



கோவில்

_______________________‍___‍___


புகலிடமா?

புதைவிடமா?

எத்தனையோ நூற்றாண்டுகள்

புதைந்து போன இடம் தான்.

கவலைகள் சிறகடித்துக்கொண்டே இருக்க‌

தாங்க மாட்டாமல்

கையேந்திக்கும்பிடும் இடம் தான்.

சிலைகள் எல்லாம்

உருட்டி விழித்துக்கொண்டு

அல்லது

கண்கள் மூடிக்கொண்டு

நம் எதிரே நிற்கின்றன.

அவை நம்மிடம் எதையோ

கேட்கின்றன.

அந்த உளிகள் உரு காட்டிய பின்

எஞ்சி விழுந்த கற்சிதிலங்களை

அந்த சிலைகள் காணவேண்டுமாம்.

அந்த ஏக்கம்

அங்கே படர்ந்து இருக்கிறது.

அந்த தீபங்களில்

அந்த பூஜைகளில்

அந்த மந்திரங்களில்

அது

இழை வீசி சிலந்தி வலையாய்

தோரணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.

அந்த சிலைகளில் எல்லாம்

நரம்பு புடைத்துக்கொண்டு

எலும்பு சதை துருத்திக்கொண்டு

நாளங்களில்

இன்னும் கண்டுபிடிக்கப்படாத‌

ஒரு மின்சாரத்தைப்பாய்ச்சிக்கொண்டு

அதோ அந்த‌

சிற்பிகள் தான் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நாம் கும்பிடும் சாமிகளின் பிம்பங்கள் எல்லாம்

வழுக்கிக்கொண்டு வழுக்கிக்கொண்டு

எங்கோ விழுந்து கொண்டிருக்கின்றன.

என்ன தான் இது

என்று

சமஸ்கிருதத்திலும் தமிழிலும்

கூப்பாடு போட்டு

தேடிக்கொண்டே இருக்கிறோம்.

பக்தி வேண்டும்.

முக்தி பெற பக்தி வேண்டும்.

பக்தியிலிருந்து முக்தி பெறவேண்டும்.

முக்தியிலிருந்தும் முக்தி பெறவேண்டும்.

எது தான் வேண்டும்?

எதற்கு வேண்டும்?

உள்ளங்களின் சிந்தனைகள்

சுளுக்கிக்கொண்டன.

"வேண்டுதல் வேண்டாமை" இல்லா

நிலை வேண்டும்.

வள்ளுவன் சடக்கென்று 

சுளுக்கெடுத்து விட்டான்.

ஹைபர் ஃபிசிக்ஸில் சொன்னால்

இன்வேரியன்ஸ்...

சூப்பர் சிம்மெட்ரி...

யுனிஃபிகேஷன்...

ஃபிஸிக்ஸும் மெடஃபிசிக்ஸும்

கை கோர்த்துக்கொண்டன.

கை குலுக்கிக்கொண்டன.

ஞானத்துக்கும் அஞ்ஞானத்துக்கும்

நடுவே தான் 

விஞ்ஞானத்தின் பிரசவவலி.

சரி

அந்த பிரம்மத்துக்கு

சுகப்பிரசவமா?

சிசேரியனா?

குழந்தை எனும் குவாண்டம்

குவா குவா என்று

குரல் 

கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.

____________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக