ஞாயிறு, 16 ஜூன், 2024

போதும் எழுந்திருங்கள்.

 



_போதும் எழுந்திருங்கள்.

_______________________________‍




நமது எல்லா நூற்றாண்டுகளும் 

க்யூபிட் களாய்

மூளைச்செதில்களில்

உண்ணப்பட்டு விட்டது.

நிகழ்வுகளின் நெஞ்சு சிலிர்ப்புகளில்

ஒட்டியிருந்த 

உயிர்ப்பசை சுரண்டப்பட்டு விட்டது.

அந்த "அண்டன் செகாவ்"

அல்லது சரத் சந்திரர்

எழுத்துக்களுக்குள் 

இழையாடிய கண்ணீர் அல்லது

வறண்ட துயரம் 

இவற்றின் ஜரிகைகளை

எப்படி ஒர்மை கொள்வது?

அன்று நாமக்கல் தாயார் சன்னதியின்

கனவு மின்னல்கள் வெட்டி வெட்டி

ஐநூறு அல்லது அறுநூறு

கணிதக்கோட்பாடுகளாய்

நிரூபிக்கப்படும் கவலையின்றி

ராமானுஜனின் மூளைக்குள் 

குவாண்டம் கம்பியூட்டிங்

சந்து பொந்துகளாய் இன்றும்

புதிர் காட்டுகின்றனவே!

இன்னும் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப்பின்

முளைக்கவேண்டிய 

கணித தேற்றங்களின் தோற்றம்

எப்படி அந்த சிந்தனையாளனுக்குள்

கரு தரித்தன?

கடவுள்களும் 

கடவுள்களை கும்பிட்டு

நிற்கின்றன.

அண்டமும் அணுவும்

அறிவோடு 

கை கோர்த்துக்கொண்டு

தட்டாமாலை சுற்றியதில்

வேதங்களின் கண்ணில்

பூச்சிகள் பறக்கின்றன.

மனிதர்களின் நியாயங்களையெல்லாம்

மடக்கி அடியில் போட்டுக்கொண்ட

மான் தோல் ஆசனம்

என்ன நீதியை காட்டிவிடப்போகிறது.

கண்களை திறந்து வைத்துக்கொண்டே

கண்களை மூடி உட்காரும் 

தியானங்கள் எல்லாம்

வெறும் மூளித்தனமான‌

தருணங்களைத்தான்

தரப்போகின்றன.

போதும் எழுந்திருங்கள்.


____________________________________________________

செங்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக