சிதறல்களாய்...திவலைகளாய்..
_________________________________________
சருகுகள் சரசரத்தன.
அவற்றின் பச்சையங்கள்
மக்கிய பின்னும்
மாயமாய் கொலுசுகள் கொண்டு
கிசுகிசுத்தன.
அந்த ஒலிச்சரங்கள்
யாருமற்ற அந்த மாந்தோப்பில்
உரையாடல்களை அரங்கேற்றுகின்றன.
இலைகள் ஈரம் இழந்து உலர்ந்த பின்
எப்படி இதயத்தின் ஈரம்
இங்கே சுருதி கூட்டுகிறது?
அவளா?
அவனா?
சொற்கள் பின்னி முடித்து
பூ வைத்துக்கொண்டது போல்..
கிளுகிளுப்பும்
வளையல் ஒலிகளும் தான்
அந்த சருகுகளில்
சன்னல்கள் திறந்து காட்டின.
குயில்களின் குக்கூக்கள்
திடீரென்று
வானம் முழுவதையும்
ஒலி பெருக்கியாக்கி...
அந்த ஓசைபிரளயத்தில்
அவர்கள் கடல்களாய் சுருண்டு எழுந்து..
சிதறல்களாய்
திவலைகளாய்
அங்கே
பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
_____________________________________________________
அஞ்சிறைத்தும்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக