கிமு..கிபி மாதிரி
ரெண்டாயிரம் கிட்ஸ்
அதற்கு மிகவும் முந்திய கிட்ஸ்
என்று
இந்த செங்கடலைப் பிளந்த
மோசஸ் யார்?
முன்பெல்லாம் பெண்கள்
தலைகுனிந்து
கன்னம் சிவந்து
உள்ளுக்குள் கலர் கலராய்
குமிழிகள் விட்டுக்கொண்டு
முகத்தை பொத்திக்கொண்டு
ஓடி விடுவார்களாமே
காதல் என்றால்.
இப்போது காதல் என்ற சொல்லே
கல் தோன்றி மண் தோன்றா
காலத்தேயும் முந்திய
கடமுடா இலக்கணச்சொல் அது.
அது வினைச்சொல்லா? பெயர்ச்சொல்லா?
என்று சரியாக விடை எழுதினால்
மூன்று மார்க் கிடைக்கும்.
குறுந்தொகையின்
"அணிலாடு முன்றில்.."
தனிமையின் இனிமையில்
அந்த அணிலோடு விளையாடி விளையாடி
அவனோடு..அவன் நினைவோடு
கண்ணாமூச்சி ஆடும்
காதலின் இன்பம் பற்றி கவிதை
எழுதிக்கொண்டிருப்பது கொலாஸல் வேஸ்ட்.
கை பேசியில்
மிஸ்டு கால் கொடுத்தால் போயிற்று..
அந்த பொமரேனியன்
மூஸ் மூஸ் என்று காதுக்குள்..கண்ணுக்குள்
எல்லாம்
மின்னல் பூச்சிகளை மேய்த்துக்கொண்டிருக்குமே.
வண்டி வண்டியாய் கிளுகிளுப்பை
சாஃப்ட் வேர் "க்யூபிட்"களில்
இறக்குமதி செய்து கொண்டிருக்குமே..
சரிடா..சீயூ...
என்று பை சொல்லிவிட்டு
மின் திரையை கழுவி மூடிவிடுமே.
அவள் சிலிர்க்க சிலிர்க்க அவன் பேசவும்
அவன் புல்லரித்துக்கொண்டே இருக்க அவள் பேசவும்
அதோ
அவர்கள் கிளிக்குகளில் தயாராய்
இருக்கின்றன ஏ ஐ மென்பொருட்கள்.
கணினிகளின்
மெல்லினத்திலும் வல்லினத்திலும்
அல்காரிதங்களே
காதல் மழை பொழிய
எப்போதும் ஆயத்தம்.
_____________________________________________
அஞ்சிறைத்தும்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக