வெள்ளி, 28 ஜூன், 2024

அஞ்சு தலை நாகமாய்...



உன்னை நான் என்ன செய்வது?

அஞ்சு தலை நாகமாய்

எனக்கு தோன்றிக்கொண்டே

பிறகு எங்கோ மறைந்து கொண்டு

எனக்கு காட்சி கொடுத்துக்கொண்டே

இருக்கிறாய்.

புள்ளிகளும் கோடுகளுமாய்

வளைவு சுழிவுகளுமாய்

வழ வழ என்று சர சர வென்று

என் மீது ஊர்ந்து கொள்ளுகிறாய்.

நான் என்ன ஆலமரமா?

மாணிக்கச்சிவப்பாய் அந்த அழகியக்கொத்துகளின்

ஆலம்பழங்களோடு என்னவோ

முறுவலித்துக்கொள்கிறாய்.

கிளிகள் தன் பச்சைச்சிறகுக்களின்

கைக்குட்டைகள் கொண்டு

என்னவோ ஒற்றி ஒற்றி எடுக்கின்றன.

உப்புக்கரிக்கின்ற உன் அந்த 

கண்ணீர்த்துளிகளின் அமுத இனிப்புகள்

அவைகளுக்கு எப்படி ருசி காட்டியது?

அடர்ந்த இலைக்கவிப்புகளில்

எனக்கு கனவுப்படலம் போல்

எத்தனை க்ராஃபிக்ஸ் காட்டுகிறாய்?

எப்போது தீண்டப்போகிறாய்?

அமேசான் அனக்கொண்டாவாய்

என் எலும்புகளை நீ நொறுக்கிக்கொள்.

அவை நொறுங்கும் சப்தத்தில்

கூழாய் சத்தமின்றி

கரைந்து போகும் 

உன் இதயமும் தான் காணாமல் போகும்.

அது தெரிந்து தான்

உன் அஞ்சுவித நீள் நாக்குப்பிளவுகள்

என் மீது நீலம் பாய்ச்சவில்லை.

நம் இதயங்கள் உள்ளே

இரண்டு பாம்புகள் போல் பின்னிக்கொண்டு

முறுக்கிக்கொண்டு கிடக்கின்ற‌

ஒரு பரவசப்பாய்மத்தில் 

நெளிகின்ற மின்சாரத்தேனாறுகள் தான்

கட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றன.

இன்னும் எத்தனை காலம்

இப்படி யொரு நச்சு மௌனத்தை

நம் வானங்கள் அடைத்து

அடைகாத்துக்கொண்டிருப்பாய்?


_____________________________________________

அஞ்சிறைத்தும்பி.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக