Erode Tamilanban
7ம.நே ·
தூக்கத்தைத் துரத்த
முடிவுசெய்யும்முன் முயலும்முன்
விழிப்பை முறையாகச்
செலவிடுவோம் என்று
விடியல்கள்
உளமார ஒத்துக்கொண்டு
கிழக்குப் பத்திரத்தில் கையெழுத்துப்
போடவேண்டும்
நட்பை வளர்ப்பதெனில்
நடுக்கமின்றிஅதைக் கொல்லும்
பகைமையுடன் எவ்விதத்திலும்
உறவில்லை என்று முதலில்
வெளிவரவேண்டும்
விலகல் ஒப்பந்தம்
அறிவுக்கு
மனித மூளையில் நாற்காலி
போட விரும்பினால்
அதைத் துடைத்து வைத்துவிட்டு
வெளியேற
அறியாமை தடைசொல்லவோ
தாமத நாள்களைக்
கூட்டிவரவோ அடம்பிடிக்கக்கூடாது
போர்கள்
தண்டிக்கப்பட வேண்டுமெனில்
ஆயுதங்களின்
மறைமுகப் பிணந்தின்னும்
பசிகள் இப்போது
இல்லையென்றும்
நாடுவிழுங்கி ஏப்பம்விடும்
நாட்டாண்மை
பூமிக்கோளத்துக்கு
வெளியே
புதைக்கப்பட்டு விட்டதென்றும்
அமைதி அறிக்கையைக்
வெள்ளாவி வைத்த சொற்களால்
அச்சிட்டு வெளியிட வேண்டும்.
பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையே இருப்பது
வாழ்வுதான்
குற்றங்கள் அல்லகொலைகள்அல்ல
என்ற நம்பிக்கை
தொட்டில் கட்டினால்தான்
கால
உதடுகளை அவிழ்க்கும்
தாலாட்டுப் பாடல்!
21--01-2025 மாலை6-25
கட்டாயம்-தலைப்பு
_____________________________________________________________________________
______________________________________________________________________________
ஈரோடு தமிழன்பன்
21--01-2025 மாலை 6.25ல்
கட்டாயம் என்ற தலைப்பில்
எழுதிய கவிதை பற்றிய கவிதை.
_____________________________________
கவிஞர் பெருந்தலைவனே!
மூளையைப்பற்றி
அதன் சினாப்டிக் ஜங்க்ஷன்
மற்றும் "பர்கிஞ்செ" செல்கள் பற்றியும்
மேலும் டி என் ஏ ஆர் என் ஏ எனும்
உயிரிச்சங்கிலிகள் பற்றியும்
உள்ளே நுழைந்து
நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு
அச்சடிக்கும் மனித அறிவு
அவன் மூளையை கழற்றி
அப்படியே டிங்கரிங்
செய்யத்தொடங்கி விட்டது.
அந்த குவாண்டம் கம்பியூட்டிங்
ஓட்டை உடைசல் வேலையில்
எங்காவது எதிலாவது
வர்ண சாஸ்திர பட்சிகளின் சப்தங்கள்
பிரம்மாக்கள் மூலம்
ஏதேனும் குடைச்சல்கள்
கொடுக்குமா?
என்று
அந்த செயற்கை மூளை
கொல்லுலைக்காரர்களைத்தான்
கேட்க வேண்டும்.
உங்கள் கவிதைத் தூண்டில்
சென்றிக்கும்
அத்தனை ஒளியாண்டுகள் மைல்களின்
ஆழம் என்னை மிக மிக
வியப்படையச் செய்கிறது.
மனிதனின்
அறிவுத் தூக்கம் கலைந்த போது
இவர்களின் பாம்புப்படம் விரித்த
பாற்கடல்
விரிப்புக்களில் எல்லாம் கேள்வி துளைக்கும்
விரியன் பாம்புக்குட்டிகள்
கோடி கோடியாய்
நெளிந்து கொண்டிருக்கின்றன.
ட்ரில்லியன்கள் என்றும்
டெர்ரா ஃப்லாப் என்றும்
கணிக்கும் வேக "வெலாசிடி"யின்
அறிவுக்கூர்மை
உயரத்துக்கும் உயரங்களாக
அடுக்கிக்கொண்டே போகிறது.
எல்லையின்மைக் கோடுகளையே
இல்லையின்மை ஆக்கிக்கொண்டு
எகிறுகிறது.
இதில்
நீங்கள் சொன்ன ஒப்பந்தங்கள்
அத்தனையும் வெளிச்சத்தின்
தீப்பந்தந்தங்கள்.
பிறப்பை வைத்து
இவர்கள் போட்டிருக்கும்
அலங்கோல ரங்கோலிகள்
அத்தனையும் கூட
அந்த "ஆண்டவன்களுக்கும்"
சேர்த்து செய்யப்பட்ட விலங்குகள் தான்.
ஒடுக்கப்பட்டவர்கள் நாளை
பிரம்மாவை புரிந்துவிட்டதாய்
சொன்னால் போதும்
அந்த கணமே இவர்களின்
வேதங்கள் எல்லாம்
நாத்திகங்களாய் மாறிப்போகும்.
உங்கள் கவிதையின்
உள் நெருப்பு
நம் எல்லா அவலங்களையும்
பொசுக்கி சாம்பலக்கும் அழகை
நன்றாக தக தகவென்று எரிந்து
காட்டிக்கொண்டே இருக்கிறது.
அந்த சொற்களின் பிக் பேங்க்
எல்லாவற்றையும்
சொல்லிக்கொண்டே இருக்கிறது!
____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக