காதல் செய்!
___________________________________
ஓ இளைஞனே!
உனக்கு காதல் தானே
செய்ய வேண்டும்.
காதல் செய்!
அதற்கு முன்
மனிதனைப்பார்த்து ஒரு
புன்முறுவல் செய்.
அவன் பதிலுக்கு
சிரிக்கவில்லையெனில்
அவன் வயிற்றுச்சுருக்கங்களை
கவனி.
அது எத்தனை நாள் பட்டினியில்
இப்படி சுருண்டு கிடக்கிறதோ
என்று பார்.
அவன் கண்களைப்பார்
ஓ அதற்குப்பதில்
அங்கே குழிகளா?
தூரத்து நிலாவின் மேடுபள்ளங்களை
உன் காதலியின்
முகப்பருக்களாக
உன் மனத்துள் உற்சாகக்குமிழிகளை
கற்பனையாக முட்ட்டைகள் இடுமுன்
அவன்
குச்சி குச்சியான
எலும்பு உருவத்தைப்பார்.
அது சோளத்தட்டைகள் அல்ல.
இந்த சோகச்சித்திரங்கள்
உனக்கு ஒரு அழகான பின்னணிக்காட்சிகள்
என்று நீ
கருதுவாயானால்
போ..தாராளமாக போய்
காதல் செய்.
அது உன் ஹார்மோன் நமைச்சல்கள்
தந்த நாகரிகமான உரிமை.
உனக்கு என் வாழ்த்துக்கள்.
ஹாய் என்று நீ
சொல்லிவிட்டுப்போகும் முன்
நீ மிதித்துக்கொண்டிருப்பது உன் நிழல்
என்று புரிந்து கொள்.
ஆம்
அது தான் இந்த சமுதாயம்.
அது தான்
உன்னை இங்கு அச்சேற்றியிருக்கிறது.
இளைஞனே காதல் செய்
முதலில்
உன் காலடியில்
நசுங்கிக்கூழாகிக்கொண்டிருப்பதை.
நீ காதலியாக உருவகப்படுத்தும்
உன் பட்டாம்பூச்சி இப்படி
கூழாவதை உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா?
சரி...போ..இளைஞனே
போ...காதல் செய்!
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக