ERODE TAMIZANPAN KAVITHAI PARTI ORU KAVITHAI
________________________________________________________________
வரலாற்றின் நெருப்பாற்றை
ஒரு சிம்னி விளக்குக்குள்
கண்கள் இடுக்கி பார்த்தவன்
எழுதும் வரிகளில்
வெளிச்சப்பிரளயம் ஆக்கினான்
ஒரு ஈரோடு தமிழன்பன்!
தமிழின்
ஒவ்வொரு எழுத்தையும்
அவன் கவிதையில்
கற்பனை வளத்தின்
பல்கலைக்கழகங்களாக
படையல் இட்டவன்.
"கொண்டு கூட்டுப் பொருள்கோள்"
இலக்கணம் தேர்ந்தவன்
எழுதுகின்றான்.
நீ நாளையை
முதுகில் பார்த்தாய்.
நேற்றும் இன்றும்
உன் முன்
மாலை மாற்றிக்கொண்டதை
அன்பு குமிழ்த்தது என்று
வாழ்த்து சொன்னாய்!...அந்த
காற்றுக்குள் பொதிந்த
பூங்காற்று உன் மொழியில்
காதல் மகரந்தங்களின்
குமிழிகளை தூவி விட்டதால்.
நிலாப்பிஞ்சுகள்
முதிர்ந்த போது
இரவுகளின் நினைவுத்தேன்
பிழிந்து பிழிந்து
விடிந்த சக்கையை
சாளரத்து விளிம்பில்
இனிமையாக்கி வீசியிருந்தது கூட
உன் சொல்லின் ஒளிப்பாய்ச்சலில்
உன் உவமையின் காமிரா
விழுங்கிக்காட்டிடும்.
அங்கே
அந்த ஒரு சொட்டுத்தமிழ்
தேனா? அமுதா?
அதை மொய்த்திடும்
எறும்புகள்
உரைத்தது கேட்டேன்.
கலித்தொகையில் குறுந்தொகையை
நீ பொங்கல் இட்டு
குலவையிட்ட இடம் என்றன.
________________________________________
சொற்கீரன்.
இருளுக்குள் இருக்கிறோம்
எனினும்
பகல் வயிற்றில்
பிறந்த நாள்களில் வாழ்வதாகச்
சொல்கிறோம்
வெயிலூட்டி வளர்க்கிறோம்
எனினும்
நிழல்களுக்கு
ஆதரவாக வாக்களிக்கும்படி
வற்புறுத்துகிறோம்
நாம்
பேசப்பழக்கிய பொம்மைகளுக்கு
மவுனவிரத த்தைக்
கட்டாயப்படுத்துகிறோம்
எனினும்
மானுட எல்லைக்குள் யாரோடும்
உரையாட வாய்ப்பில்லாத அவற்றின்
வாழ்க்கை உடைந்து நொறுங்கக்
காரணமாகிறோம்
பாதி வாழ்க்கையில் ஒருவர்
இறக்க நேர்ந்தால்
அழுது வழியனுப்புகிறோம்
எனினும்
பாதி மரணத்தில்
ஒருவர் திரும்பிவிட்டால்
குடும்பத்தில்
ஒவ்வொருவருக்குள்ளும்
மறுபாதி மரணத்தை நாமேதான்
பரிமாறுகிறோம்
சிரிப்பு விலைக்குக்
கிடைக்கும் கடைத்தெருவில்
ஒருமுறை போய்வந்தால்கூடப்
பணமிழந்த துயரம்
அழுகை குடித்து வளர்கிறது
எனினும்
இலவயச் சிரிப்பை வழங்கும்
பூக்களும் புன்னகையும்
உடுக்களும் நிலாவும் கூடவே
குழந்தைகளும் ஞானிகளும்
கண்ணிற்படாமல்
கடந்துகொண்டிருக்கிறோமே
இதை என்னவென்பது?
தலைப்பு-இதை என்னவென்பது?
24--1-2025
GIVEN BELOW ERODE TAMIZANBAN'S KAVITHAI
வெள்ளம் போனபின்
படகேறித் துரத்தியவன்
எங்கேபோவான்?
எதைப் பிடிப்பான்?
நேற்றிரவு நிலாப்பார்க்காதவன்
இன்று
கதவைத்திறந்து
வெளியேஓடுகிறான் அதைப்
பிடிப்பதற்காக
வாக்கியங்களில்
இடம்கேட்ட சொற்களை
வெளியே நிற்கக்
கட்டளை போட்டவன்
கருத்துக்குள் கிடக்கிறான்
வெளியே வரமுடியாமல்.
கண்களைத்
திறந்தவன் தூக்கத்தை
விரட்டினான்
கனவுகள்
வேறு கண்களைத் தேடிப்
போய்விட்டபின்
தூக்கத்தைத் தூக்கிக்கொண்டு
எந்தக்
கனவின்பின்னால் இவன்
ஓடுகிறானோ தெரியவில்லை.
நிகழ்காலத்தை
வைத்துக்கொண்டு
கடந்த காலத்தையே
கடைந்துகொண்டிருப்பவன்
கைகளுக்கு
எதிர்காலம் ஏந்திவந்த பூக்கள்
அவன்
இறுதி ஊர்வலத்தில்
இறைந்துகிடந்தன தெருநெடுக.
இப்படியா வாழ்வது? 22-01-2025பகல்1-25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக