உலை வைக்கிறேன்
உண்ணலாம்
என்று சொல்லி
உனக்கே
உலை வைக்கும்
உலுத்தர்கள்
கும்பல் கும்பலாய்
ஆட்சி மன்றத்தை
கும்பமேளாக்கள்
ஆக்கிக்கொண்டிருக்கும்
மூடக்கொடூரம்
என்றைக்கு தொலைவது?
கணினிக்கிணற்றுக்குள்
விழுந்து
காணாமல் போவதற்கா
ஓட்டு எனும் பூ
உன் காதில் வைக்கப்படுகிறது?
பொங்கல் வருகிறது
பொங்கல் என்று சொல்லாதே.
"மகர சங்கராந்தி" என்று
கன்னத்தில் போட்டுக்கொள்
என்று
மசோதாக்கள் கூட
மந்தை மந்தையாய் வரலாம்!
குலவைகள் இட்டு
ஒலிப்பது எல்லாம் இருக்கட்டும்.
ஆனால்
மஞ்சள் குங்குமம் கற்பூரப் பூசனை எல்லாம்
அந்த "சூரியக்குழம்பை"
உன்னுள்
பொங்கல் இட்டு விடாது.
மாட்டுக்குதான் வர்ணம் என்று
பூசி பூசி மகிழாதே.
நாலு வர்ணம் என்று சொல்லி
உன்னை நாலாயிரத்துண்டுகள் ஆக்கிய
நரிகளை நீ
நரி
இடம் போனால் என்ன
வலம் போனால் என்று
நெட்ஃப்ளிக்ஸில்
மூடிப்போர்த்து
நாளைய வெறும்
டிஜிடல் ஃபாஸ்ஸில்கள் ஆகிவிடாதே.
விஞ்ஞானத்துக்கும் நூல் தரித்து
இதோ
சூரியபகவான் நானே என்பார்களே.
எப்போது
உன் இயற்கை மூளைகளை
கூர் தீட்டப்போகிறாய்?
இவர்களின் செயற்கை மூளைகள்
கிலோ மூணு ரூபாய் என்று
அந்த கறிக்கடைப் பக்கத்திலேயே
கடை போடுகிறார்களே...
அப்போதும்
நீ சிந்த்திக்க வில்லை என்றால்
இனி
ஆடுகள் தான் உன்னை
கசாப்பு செய்ய ஆள் பிடிக்கும்.
விழி
எழு.
.......ஆம்.
அப்போது தான்
உன் வானம் களவு போகாமல்
காக்கப்படும்.
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக