செவ்வாய், 14 ஜனவரி, 2025

அந்த மாயத்தீயில் ....

 

அந்த மாயத்தீயில் ....

_________________________________________


மலடாகிப்போன தருணங்கள்

நாட்கள் மாதங்கள் 

நூற்றாண்டுக்காலங்கள்.....

இவற்றை குப்பையில் போடுங்கள்.

போர்களும்

பிணக்குவியல்களும்

ரத்த ஆறுகளும்

சிந்தனையே அவிந்து போன‌

காலத்தின் சுவடுகளாய்

முற்றுப்பெறாத இந்த‌

உயிர் அற்ற மெய் எழுத்துக்களை

அச்சடித்து அச்சடித்து

எதற்கு இப்படி குவிக்கிறீர்கள்.

வானத்தை நோக்கிய‌

உங்கள் கூக்குரல்களைக்கொண்டு

அந்த கிழிசல் வானத்தை

தைக்க முடியுமா?

நீங்கள் கும்பிட்டு கூப்பிடுகின்ற‌

அந்த அரைவேக்காடு

இன்னும் இன்னும் 

அரைகுறை சடலம் கோர்த்த‌

வலிகளையும் வேதனைகளையும் தானே

கொட்டிக்கவிழ்த்து

இந்த மண்ணையும் நீரையும்

மலைக்குமிழ்ப்புகளையும்

பள்ளங்களின் படுகைகளையும்

காயப்படுத்திக்கொண்டிருக்கின்றன!

நடந்தவைகளும் நிகழ்ந்தவைகளும்

கழித்துப்போட்ட‌

எலும்பு மிச்சங்களை

பூதக்கண்ணாடி வைத்து

உற்று உற்றுப்பார்த்து

என்ன கண்டுபிடித்தோம்?

தொன்மையையா? தொலைத்தவைகளையா?

அந்த மக்கிய மண்ணின் அடியிலும்

வைர ஆபரணங்கள் கிடைத்ததென்று

பல ஆயிரம் ஆண்டுகளையும்

விழுங்கித்தீர்த்த‌

அந்த ஆசைத்தீயைக் கண்டுகொள்ளவா

இத்தனை பாடுகள்?

மனிதனுக்கு மனிதன்

கசிந்து கொண்ட கலந்து கொண்ட

மலர்ச்சிப்பாடுகளின்

உயிரிழைகள்  வற்றாமல்

கிடக்கிறதை

இன்னுமா நீங்கள் கண்டுபிடிக்க வில்லை.

போதும்.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்

பிளிறிய உறுமிய‌

அந்த ராட்சசப்பல்லிகளே

சாட்சி சொல்லி விட்டன.

அது போதும்.

இன்னும் இந்த மண்ணில்

கேள்விகளின் மழை பெய்யவே இல்லை

என்ற அவற்றின்

தாகத்தீக்குரல்கள் இன்னும்

நம் ஜிகினா முகங்களை

பொசுக்கிகொண்டு தான் இருக்கின்றன.

ஒரு கேள்விக்கே

இத்தனை கோடி ஆண்டுகள்

மலட்டுத்தனமாய் ஊர்ந்து போனபின்

இனி

எந்தக்கடவுள் வந்து

உங்கள் சிந்தனைத்தீப்பொறியை

ஊதி விடப்போகிறது?

கண்களே திறக்காத உங்களுக்கு

எதற்கு

இந்த சூரியன்களும் 

நிலவுக்கூட்டங்களும்

விண்மீன்களும்?

அந்த கணித நூல் கண்டு

சிக்கல்களில் பிடிபடாத‌

தீர்வுகளின் தாவு தீரும் வரை

அந்த மாயத்தீயில் 

பொசுங்கிக்கொண்டிருங்கள்.


____________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக