சனி, 4 ஜனவரி, 2025

என்ன செய்வது?

என்ன செய்வது?

__________________________________________

 

நெல்லிக்காய் மூட்டையாய்

உருண்டு சிதறி ஓடுகிறது.

நூத்திநாப்பத்தஞ்சு கோடி என்றால்

சும்மாவா?

எத்தனை?எத்தனை?

தந்திரங்கள்...சூழ்ச்சிகள்...

கலர் கலராய்

பொம்மலாட்டங்கள்.

சொர்க்க நரக சொக்கட்டான்கள்.

பாவ புண்ணிய பம்மாத்துகள்.

ஏழு ஜன்மங்களில்

சட்டைகள் மாற்றிக்கொண்டு

உறுமும் 

காட்டுவிலங்குகள்.

மனித வாசனையற்ற‌

மனிதக்காடுகள்.

தனிமனித நீதியும்

சமூக நீதியும்

கைகளை முறுக்கிக்கொள்ளும்

கொல்லுப்பட்டறை

அடி தடிகள்.

ரெண்டு மூணு சதவீத‌

மூளை வீங்கிகள்

மற்ற மொத்தத்தையும்

தின்று விடத்துடிக்கின்ற‌

அதர்மத்து அரசியல் தத்துவங்கள்.

வர்ணசாஸ்திரங்கள்

இருட்டை 

அள்ளிப்பூசிக்கொண்டிருக்கின்றன.

அடாவடித்தனங்கள்

அங்கே அலங்கோலச் சித்திரமாய்

படலம் விரித்து

பந்தல் போட்டுக்கொண்டிருக்கின்றன.

மேள தாளங்களின் இரைச்சலில்

உண்மையோ

நசுங்கி பொசுங்கி

நாற்றம் அடித்துக்கொண்டிருக்கிறது.

என்ன செய்வது

என்ற கையறு நிலை

ரத்தக்கண்ணீரில்.


________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக