ஒரு அல்காரிதம்
_______________________________________________
இந்த காகிதங்களும்
மின் அஞ்சல்களும் இல்லாத
காலத்தில்
கைக்கு கிடைத்த
நண்டு சிண்டுகளை
தூது அனுப்பி
காதல் கிசு கிசுக்களை
காதுக்குள்
சிலிர்க்க வைத்த
"அந்தக்கால" நினைப்புகள்
காதலை விட
சுவாரஸ்யமானவை தான்.
அரசர்கள்
தங்கள் புஜங்களை
முறுக்கிக்கொண்டு
போர் முரசு பற்றிவைகளை
தூதாக அனுப்பும் புறாக்களை
உள்ளே இருக்கும்
பகைச்சூடு தெரியாமல்
"பிரியாணி" வைத்து தின்றதாய்
ஜோக்குகளை
காட்டும் நகைச்சுவை
உண்மையில் போர் எதிர்ப்பு இயக்கத்தின்
அற்புத வடிவம் தான்.
இப்போது
செயற்கை மூளையைக்கூட
இடுப்பில் கட்டி வைத்திருக்கும்
"வெற்றிலைச்செல்லம்" போல்
ஆக்கி விடலாம் என்று
விஞ்ஞானம் மீசையை முறுக்குகிறது.
"எல்லோரும் இன்புற்றிருப்பதே அல்லாமல்
வேறொன்றறியோம் பராபரமே"
என்ற ஏக்கம்
இந்த உலகமக்களின்
எல்லா மூலை முடுக்குகளின்
அந்த
சப்பாத்திமுட் கள்ளி பாலைவனத்தையும்
சுடர்பூக்கும் "அன்பு பூ "வாக
மாற்றிவிடும்
ஒரு அல்காரிதத்தை
ஓ விஞ்ஞான மனிதனே
எப்போது நீ எழுதப்போகிறாய்.
_____________________________________________
சொற்கீரன்
30-01-2025 அன்று
இனியில்லை அந்தக்காலம்!
என்று எழுதிய
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை பற்றிய
கவிதை இது
_________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக