வெள்ளி, 24 ஜனவரி, 2025

கால்மணிநேரத்தூறலாநீ?

 


கால்மணி நேரம்

தூறல் போட்டுவிட்டுக்

கதவைச்சாத்தினால் அதன்பெயர்

கார்மேகமல்ல

குருவிக்கூட்டைக்

கலவரப்படுத்தி மறைவதற்குக்

கோடையிடி யைப்

பட்டறைபோட்டுத் தயாரிக்க

வேண்டியதில்லை

வானம்

போகும் இடம்

முடிவாகாமல் வாழ்வெல்லாம்

நடப்பவன்

எதைக்கடப்பான்?எதைஅடைவான்?

இவனைவிடத்

தூங்கப்போலாம் என்றுமுடிவுசெய்யும்

தூரங்களின் அண்மையும்சேய்மையும்

போற்றத்தக்கவை.

கடிகாரம் ஓடுவது

தூரத்தைக் கடப்பதற்காக அல்ல

நேரத்தைக் கடப்பதற்காக

மனிதன்

நாள்களைக் கடப்பது

வாழ்க்கையை முடிப்பதற்காகஅல்ல

வெற்றியை அடைவதற்காக!

25-01-2025காலை 9-35

தலைப்பு-கால்மணிநேரத்தூறலாநீ?


______________________________________________





கால்மணிநேரத்தூறலாநீ?

கவிப்பெரு மழையே

"என்ன கேட்டாய் என்று

கால் கடுக்க நின்று காத்துக்

கொண்டிருக்கிறது

அந்த புள்ளி மழை

காது கேட்காத மாதிரி.

விசும்பின் துளி வீழினல்லால்

என்று

அவனும் எழுத்தாணியை

தூறலில் ஒற்றியெடுத்து தான்

நமக்கெல்லாம் ஒத்தடம் கொடுத்தான்.

ஒத்தடமா அது ? ஒப்பற்ற தடம் அல்லவா?

வான்சிறப்பு என்பதே 

அவசொற்சாவிகள் கிலு கிலுக்க‌

அது கிறங்கியதில் உள்ள‌

வான் திறப்பு அல்லவா.

அப்புறம் அந்த குருவி மொழி பேசினாய்!

குருவித்தலையில்

பனங்காய் வைத்து வதைக்கும்

இந்த செயற்கை கலவரக்காரர்கள்

மக்கள் சிந்தும் ரத்தத்தை எல்லாம்

ரங்கோலிகள் ஆக்கி

சப்பளாக்கட்டைகள் தட்டுபவர்கள்

ஆயிற்றே.

இந்த பாறைமனத்துப் பாலைவனத்தில்

ஈரங்கள் கசிவதேது?

சிதறிய‌

சமுதாயச் சில்லுகளையெல்லாம்

கேட்டுக்கொண்டா

அந்த சம்மட்டிகள்

நாகரிக சிற்பத்தினை

தட்டி நொறுக்குகின்றன.

நீ இந்த கடிகாரங்களைத் தான்

கடிந்து கொள்ள வேண்டும்.

உன் முட்கள் ஏன்

மழுங்கி மர மட்டையானது என்று?

போதிய காலத்தை

பொதிந்து வைத்திருக்கிற அவற்றின்

போதாத காலம் தான்

இப்படி நீதி கேட்காமல்

மரவட்டையாய் மரத்துப்போய்

சுருண்டு கிடப்பது.

கவி வேந்தே!

உன் செங்கோலிலிருந்து

கருந்துளை ஒன்று

கண் வைத்து காத்திருக்கிறது

இந்த ஜிகினா நட்சத்திரங்களை

விண்டு விழுங்கி விட.

_________________________________________________

சொற்கீரன்


"கால்மணிநேரத்துறலா நீ?"

என்று கேட்ட ஈரோடுத்தமிழன்பன்

அவர்களின் அடர்மழைக்கவிதையில்

நனைந்து வந்த என் கவிதை இது.


___________________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக