ஒளி கசிவுகளோடு
ஒரு புகை மண்டலம்.
விண்ணில்.
அதிலிருந்து
முள் இல்லாத ஒரு
புன்னகை ரோஜா!
யாருடையது?
யாரை நோக்கி இது?
நீ தான்.
உன்னுடையது தான்.
இதிலிருந்து தான்
நீ குமிழியிட ஆரம்பித்திருக்கிறாய்.
மகிழ்ச்சியின் அர்த்தம்
மகிழ்ச்சியே தான்.
இதற்கு கடவுள் என்ற
நுரை மகுடம்
சூட்ட வேண்டியதில்லை.
உன்னைப்பற்றிய மகிழ்ச்சி.
அடுத்தவரைப்பற்றியும் மகிழ்ச்சி.
இந்த வட்ட அலைகள்
பெருகிக்கொண்டே இருக்கட்டும்.
இதன் மேல் கல்லை அடுக்கி
கட்டடங்கள் வேண்டாம்.
இருட்டுக்கூடுகளில்
இன்னல் முட்டைகள் வேண்டாம்.
மகிழ்ச்சிச்சிறகுகள் மட்டும்
வான விளிம்புகளை
உடைத்து நொறுக்கி
உயர்ந்து கொண்டே இருக்கட்டும்.
இதற்கு தியானம் எனும்
மாயத்தூக்கம் தேவையில்லை.
ஒரு பேனாவும் காகிதங்களும் போதும்.
சிந்தனை ஊற்றுகளில்
எழுத்து மின்னல்கள்
வரி வரியாய்...போதும்.
எழு..என்பதே
விழி என்பதாய்
உன்னுள் கோடி சூரியன்களை
பூக்கிறது.
பூக்கட்டும்.
மூளி மகரந்தங்களில்
முகம் தெரியட்டும்.
அகம் ஒளிரட்டும்.
_________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக