வெள்ளி, 31 ஜனவரி, 2025

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப்புகட்டி.....

 

அணுவைத்துளைத்து ஏழ்கடலைப்புகட்டி....

_________________________________________________________


இரவுத் திரையெல்லாம்

சல்லடை.

நட்சத்திர ஓட்டைகளால்.

யார் சொன்னது

ஓட்டைகள் என்று?

அவையெல்லாம் நம்

இன்னொரு வாசல்கள்.

வருவதற்கா?

போவதற்கா?

கொஞ்சம் பொறுங்கள்.

இப்படியெல்லாம்

ஒப்பாரிகளை இலக்கியம்

ஆக்கும் தேவை வராது?

என்ன சொல்கிறீர்கள்?

விஞ்ஞானம் 

மனிதனை

கூண்டோடேயே 

கைலாசம் அனுப்பும் 

சாதனைகளை நிகழ்த்திவிடும்

போல் இருக்கிறது.

சை ஃபை எனும்

விஞ்ஞான சினிமாப்படங்கள் தான் 

நம் "திருவிளையாடற்புராணங்கள்".

செயற்கை நுண்ணறிவு

மனிதக் கற்பனைகளையெல்லாம்

விழுங்கி ஏப்பம் விட்டு விடும்

என்கிறார்களே.

செயற்கையாய் எல்லாவற்றையும்

படைக்கும் மனிதன்

செயற்கையாய் கடவுளையும் 

படைக்கலாம் அல்லவா?

பார்த்தீர்களா?

கடைசியில் கடவுளின் 

விஞ்ஞானத்துக்கு வந்து விட்டீர்கள்.

ஆமாம்.

கடவுள் தனக்கு ஒரு கடவுள்

வேண்டுமென‌

மனிதனின் செயற்கை மூளையிடம் தானே

வந்திருக்கிறான்.

அறிவின் நுனிக்கொம்பர் ஏறி

அஃது இறந்து ஊக்கின்...

அறிவிற்கு அது இறுதி ஆகாது.

அறிவு எல்லாவற்றையும் 

உடைத்துக்கொண்டு

ஓடிக்கொண்டே இருக்கும்.

யார் சொன்னது

வள்ளுவன் 1330 குறளுடன்

நிறுத்திக்கொண்டான் என்று?

அறத்துக்கும் இன்பத்திற்கும்

நடுவில் இருப்பது "பொருள்"

அதுவே மையம்.

அதன் மைய அறிவின்

"அணுவுலைக்கூடம்"

நம்மை 

ஆயிரம் பிரபஞ்சங்களையும்

படைத்து விடும் வல்லமை தருகிறது.

இதைத்தான் அவ்வையார் 

அணுவைத்துளைத்து ஏழ்கடலைப்புகட்டித்தரும்

குறள் என்கிறார்.

இந்த "பொருள் முதல் வாதம்"கூட‌

டையலக்டிகல் தான்.

கடவுளா? மனிதனா?

என்ற இரட்டை வாதமே

அந்த போட்டியே

மனிதனை எங்கோ ஒரு உயரத்துக்கு

கொண்டு போயிருக்கிறது.

அந்த இரட்டை வாதமே 

முரண்பாட்டு வாதம்.

அது தான் நம் சாதிகளின்

தடைக்கற்களையெல்லாம்

தட்டி நொறுக்கும்.

இன்று கூகிள்

ஒரு கண்டுபிடிப்பை

வெளியிட்டிருக்கிறது.

நம் பிரபஞ்சத்தைப்போலவே

பல கணக்கற்ற பிரபஞ்சங்கள்

இருப்பதாய்

அது உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதற்கு கணித சாதனைகள் செய்யும்

பெரிய பெரிய சூப்பர் கணிப்பொறிகள்

எல்லாம் உட்கார்ந்து கணக்கீடுகள் செய்தால்

பலப்பல பில்லியன் அதாவது

பத்து குவார்டில்லியன் ஆண்டுகள் ஆகுமாம்!~

இதை கூகிளின் "குவாண்டம் சிப்"

தன் "வில்லோவில்" ஐந்து நிமிடங்களில்

சாதித்து விடுமாம்.

அதுவும் ஒர் 150 க்யூபிட் சிப்பில்!

அப்படித்தான்

அந்த "முகம் பார்க்கும் கண்ணாடி பிம்பங்களை"போல‌

உள்ள அந்த "மிர்ரர் யுனிவர்ஸை"

அதாவது இணைப்பிரபஞ்சங்கள் எல்லையற்று 

இருப்பதாய் அந்த‌

"குவண்டம் சிப்"சொல்கிறது!

தலை சுற்றுகிறதா?

கவலைப்படாதீர்கள்

நம் மூளையே

"சட்டைப்பை" கணினியாகி விட்டால்

அருகே உள்ள இதயம் கூட‌

அது சொன்னபடியே கேட்கும்.

இனி காதல் பிருந்தாவனங்களும்

நந்த குமாரன்களும்

குவாண்டத்து வனங்களில் தான்

சஞ்சரிக்க வேண்டும்

"க்யூபிட்"  பட்டாம்பூச்சிகளாய்!


________________________________________________________

சொற்கீரன்


________________________________________________________________________

https://www.msn.com/en-us/technology/quantum-computing/google-unveils-a-quantum-chip-that-confirms-the-existence-of-parallel-universes/ar-AA1ybS0N?ocid=BingNewsVerp




Google unveils a quantum chip that confirms the existence of parallel universes


_________________________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக