வாழ்க! வாழ்க ! எல் ஐ சி!!
________________________________________________
எங்கள்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமே!
உன் மூன்றெழுத்தே
இந்த நாட்டு பொருளாதாரத்தின்
தலையெழுத்து.
மக்கள் சேமிப்புகளின்
உயிரெழுத்தும் மெய்யெழுத்துமே கூட
அதுவே தான்.
கேவலம் நாம் மரணமடைந்து விடுவோம்
என்றா
துளி துளியாக அந்த
அலை அலையாக
வேர்வைக்கடலை உருட்டித்திரட்டி
பிரீமிய நிதிகளின்
இமயமாக்கி தந்தார்கள்
இந்திய மக்கள்?
நம் ஜனநாயகத்தின்
"ராஜ"மகுடம் அல்லவா
எல் ஐ சி.
வெறும் வெள்ளைக்காலரும்
மடிப்பு கலையாத சட்டையும்
போட்டுக்கொண்ட
"குமாஸ்தா"க்கள் என்று
உதடு பிதுக்கியவர்கள் கூட
உலுக்கியெழுந்து
நிமிர்ந்து பார்த்தார்கள்!
எப்படி இவர்கள்
நத்தைக்கூடுகளில் நசிந்து கிடந்த
உழைக்கும் வர்க்கத்தின்
உயிர்ப்பான
ஆற்றலையும் துடிப்புகளையும் கூட
ஒன்று கூட்டி
வென்று காட்டுகின்றனர்?
அறிவு ஜீவிகள் எல்லாம்
கம்பியூட்டரைக்கண்டு
வாய் பிளந்து வியந்து நின்ற போது
அது
நம் உழைக்கும் சக்தியை
குப்பைத்தொட்டியில்
வீசி எறிய வந்த அரக்கம் என்று
வெளிச்சம் காட்டியது
எல் ஐ சி ஊழியர்களின்
எழுச்சிப்போராட்டம் தானே.
அது உண்மையாகிப்போனது என
இன்று அறிந்தோம்.
பொதுத்துறைகள் எல்லாம்
அந்த திமிங்கிலங்களுக்கு
இரையாகிப்போனதே!
சூதாட்ட பொருளாதாரத்தின்
அழிவுகளில் கூட
நம்மை நிமிர்த்திக்கொள்ள
முட்டுக்கொடுத்ததும்
நம் எல் ஐ சி தானே.
நரம்புகள் அதிர அதிர
வீணைகள் மீட்டலாம்.
கிடார்கள் இசைக்கலாம்.
ஆனால்
உழைக்கும் வர்க்கத்தின்
வேர்வை நரம்புகளில் தானே
நாட்டு வளர்ச்சியின்
செங்கீதம் கேட்கும்!
கம்பெனி சாணக்கியங்கள்
கால் இடறி வீழ்ந்த போதெல்லாம்
வழி காட்டும் ஒப்பற்ற
விழியாகி
வியப்பாகி
விடியல் காட்டும் நம்
கலங்கரை விளக்கமே
எல் ஐ சி!
வாழ்க!வாழ்க!எல் ஐ சி!
வளர்க வளர்க நம் எல் ஐ சி!
______________________________________________
செங்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக