உனக்கு நீயே
___________________________________
தேடு
கிடைக்கும் என்று
குரல் கேட்கிறது.
எதிரொலிக்கிறது.
மணியோசைகள்
பொழிப்புரை எழுதுகின்றன.
புறாக்கள் சிறகுளை உதடுகள் ஆக்கி
உதிர்க்கின்றன செய்திகள்.
தெய்வங்களே
நீங்கள் என்ன தான் சொல்லுகிறீர்கள்.
இந்த மக்களின் பசியை
மொழிபெயர்த்து தரும்
ஒரு கவளம் சோறு
அல்லது ரொட்டி
தடையின்றி கிடைக்க
உங்கள் வசனங்களும் மந்திரங்களும்
ஒரு வழியையும் காட்டவில்லையே...
சட்...
நிறுத்து ...
உன் அழுகையைக்கேட்கும்
கடவுள்கள் இங்கே எதுவுமில்லை.
உன் தொழும் கைகளில்
முறுக்கேற்றிக்கொள்.
நரம்புகளில் உன் சினத்தீயின்
குழம்பு
ஒரு பிரவாகமாக
பெருகட்டும்.
வலியவர்கள் எளியவர்கள்
என்று எவரும் இனி இல்லை
என்று உணர்.
அநீதியையும் ஆதிக்கத்தையும்
உன் எழுச்சியே
சாம்பலாக்கும்.
அந்த சாம்பல் பறவைகள்
எல்லா மூடத்தனத்தை
அழித்து விடும்.
முடக்கு வாதங்களால் முறிந்து போன
நம்பிக்கை சிதிலங்களையும்
சீர் படுத்தும்.
மீண்டும் மீண்டும்
கடவுள் கடவுள் என்று
இந்த குட்டிச்சுவர்களில்
மோதிக்கொள்ளாதே.
உன்னையே
நீ எண்ணிப்பார்.
அப்போது தான்
இந்த வெறும் கூழாங்கற்கள்
உன்னை தடுக்கும் இமயங்கள் இல்லை
என்று தெரியும்.
திசையை கூர்ந்து நோக்கு.
வழியை தெளிவாக அறி.
மண்டியிடுவதால்
மண்ணுக்குள் அமிழ்ந்து போவாய்.
சிலிர்த்தெழும் சூரிய வீச்சுகளாய்
விழி
எழு.
உன் முன்னே தடைகள்
எல்லாம்
தகர்ந்து விழும்.
உறுதி கொள்.
உயர்த்து முழங்கு.
உனக்கு நீயே தான் கடவுள்.
உன் கால் சுவடுகளே கோயில்.
________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக