சிலிர்க்கும் அஞ்சலிகளோடு......
_________________________________________
"சித்திரச்செவ்வானம்...."
அந்த பாடலின் இசை முறுக்கம்
பொழிந்த போது
அந்த வானம் உணர்ச்சியில்
உதிர்ந்து
பொல பொலவென்று
மல்லிகையில் மழை பெய்தது.
அந்த ஒரு பாட்டு மட்டுமா?
பட்டியல் இட
நான் கூப்பிட்டேன்
அந்த பாறையை
அந்த ஓடையை
அந்த விண்மீன்களை
அந்த மாந்தோப்புக்குயில்களை
......
பட்டியல் நீண்டு கொண்டே
போகிறது.
சினிமா இசை என்பது
சிலருக்கு
மதுக்கிண்ணம்
சிலருக்கு
பாரிஸ் சேம்பெய்ன்
சிலருக்கு
"தேவாமிர்தம்"
அர்த்தம் புரிபடாமலேயே
இனித்து இனித்து
களிப்பது என்பது தான் அது.
உலக விருதுகளையெல்லாம்
உருட்டித்தாருங்கள்.
அவன்
பாட்டின் கனத்தின் முன்
பாட்டின் பனை நொங்குப்
பளிங்குத்துளிகளின் முன்
அவன்
மூச்சுப்பிருந்தாவனங்களின்
பொன் துகளாய் சிதறும்
இன்பம் தரும் பண்ணின்
மகரந்தத்தூசிகளின் முன்
அந்த விருதுகள்
முகவரி இழந்து முகம் மூடி
ஓடியே போய்விடும்!
அவன் பாடல்கள் கேட்கும் போது
வைரமுத்துக்கள் மறந்து போகிறார்கள்.
இளையராஜாக்கள்
எங்கோ ஒரு ஓரத்தில் போய்
நின்று கொள்கிறார்கள்.
அவன் குரல் ஒரு "குவாண்டத்தின்" இசை.
விஞ்ஞானம் சொல்கிறது அந்தக் குவாண்டம்
இசைக்கும் ஆனால் இசைக்காது
அது எப்படி "இரண்டும்" முரண்டு பிடிக்கும்.
ஆம்.
அவர் இசை கடலாய் மேலெழும்பி
வானம் மறைந்து போகும்.
அல்லது
வானமே பூம்பிரளயமாய்
நம் அடி மனதை
வருடிக்கொண்டே இருக்கும்.
அவர் பாடலை
பாத்ரூமில் நீங்கள் ஹம் செய்யும்போது
ஷவரில் கொட்டுவது தண்ணீர் அல்ல!
பன்னீர்
பன்னீர்புஷ்பங்கள்..
இன்னும் என்ன சொல்ல?
கண்கள் பனிக்கின்றன.
உயிர் கரைந்து கரைந்து
மீண்டும்
துளிர்த்து துளிர்த்து
இனிமையை
சொட்டிக்கொண்டே இருக்கின்றன.
சித்திரவானம் பாடியவனை நினைந்து
கருகி உள்ளங்கள் இப்படி
சித்திரவதைக்குட்படும் எனத்தெரிந்தால்
.....
காலன் கணக்கை மாற்றவும் தயார்தான்.
ஆனால்
அவனுக்கு அவன் தூக்கமே இனி இன்னிசை.
காலன் என்ற அந்த காலிப்பயலுக்குள்ளும்
கண்ணீர் மழை தான்.
______________________________________________________
சிலிர்க்கும் அஞ்சலிகளோடு
சொற்கீரன்.
CALIFORNIA USA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக