எங்கென்று தெரியாது
விழுந்துவிட்ட ஒரு முற்றுப்புள்ளியை
நம் கால வரலாற்றில்
எங்கு வைப்பது?
மதச்சார்பின்மை விளக்கங்கள்;
கடவுளர் கண்ணீர்
துடைத்தோம் என்று தொடர் நின்ற இடத்தில் அதை இட்டு
வைப்போமா?
போதும்
பெண்ணைப்
பெருமைப்படுத்திவிட்டோம்;
கல்லறையில்
துகிலுரியாமல் மணிப்பூரில் பெண்கள்
அடக்கம் செய்யப்பட்டார்கள்
என்று எழுதிஅங்கு
அதை வைப்போமா?
போதும்
வறியவர் மீதான வருத்தம்;
அவர்கள் தியாகத்தின் பயனாக
நம் நாட்டிலும்
உலகப்பணக்காரர்பட்டியலில்
இடம்பெறத்தக்கவர்கள்
நாலைந்துபேரை உருவாக்கிவிட்டோம்
என்ற வாக்கிய முடிவில்அதை வைப்போமா?
போதும்
ஏழையல்ல பாரதமாதா
என்றுசொல்ல -குபேரபுரிகளின்
கொடியேற்றுவிழாக்கள்;
எண்ணமுடியாக் கப்பரைப்
புள்ளிவிவரம் திரட்ட வேண்டாம்;
பசியால் பட்டினியால் மாண்டவர்கள்+
மண்டையோடுகள்
கிடைக்கவில்லை என்ற வாக்கிய
மூச்சுநின்ற இடத்தில்
ஒற்றைக் கண்ணீர்த்துளியாய்
அந்த முற்றுப்புள்ளியை
இட்டு வைப்போமா?
கொத்து முள்ளுகள்
கொத்திவந்த அந்த முற்றுப்புள்ளி
பிறந்த கதையை இருண்ட
வரலாற்றை விழிமூடி எழுதியவர்களைக்
கேட்டால் தெரியும்
பின்தங்கிய
பூச்செண்டுகள் தூக்கக் கலக்கம்
தொலையாத நிலையில்
தூக்கிவந்த அந்த முற்றுப்புள்ளி
எந்தக் குருதித் தொகுப்பைச்
சேர்ந்ததென்று
மருத்துவ அறிவியல்அறிஞர்களைக்
கேட்டால் தெரியும்.
26-01-2025காலை மணி10
தலைப்பு -அந்த முற்றுப்புள்ளி
___________________________________________________________
முற்றுப்புள்ளிகள் இல்லாத முற்றுப்புள்ளிகள்
______________________________________________
உலக டாலர்களின் குவியல்
கொட்டுகின்றது கல கலவென்று
நிறுத்தற்புள்ளிகளை
அந்த ரம்ப நாக்கு பசியாறவில்லையாம்
கரித்த
ஏழைகளின் கண்ணீர்த்துளிகளின்
முற்றுப்புளிகள்
அல்ல அல்ல
முத்துப்புள்ளிகள்.
அந்த ஒரு புள்ளியின்
எதோ ஒரு மூக்குநுனியை
நுண்ணோக்கியில் பார்த்தால்
தெரியும்
அவை கையாலாகாத எளியவர்களின்
எலும்புக்கூட்டுச்சிதிலங்கள் என்று.
சித்தாந்தங்கள்
போதிய ரத்தம் சிந்தியும்
அந்த ரத்த சிவப்பு அணுக்களின்
சிவப்புக்கொடிகளின்
அலைகள் இன்னும் பத்த வில்லையாம்!
உங்கள் கவிதை
ஒரு சிறந்த ரத்தப்பரிசோனையாய்
அவலங்களை
அகல அகலமாய் விரித்துக்காட்டிய
போதும்
மண்டை சுடுகிறகிற
உச்சி வெயில் சூரியனைக்கூட
"சூரியனா அது?
அது ஏதோ ஒரு நசுங்கிய
கரப்பான்பூச்சியின்
வெள்ளைச்சிதிலங்கள் என்று அல்லவா
நினைத்தோம் என்று
ஆய்வு அறிக்கைகள் நீட்டுவோர் தான்
ஏராளம்!ஏராளம்!!
நீதியரசர்கள் மேசையில் தட்டுகிற
மரச்சுத்தியல்கள்
வெறும் மரத்துப்போன ஒலிகளா?
கேட்கவில்லை காது.
செவிட்டு மெஷினுக்கு
மட்டும் ஆர்டர்கள் குவிந்திருக்கின்றன
கோடி கோடியாய்!
_______________________________________________________
சொற்கீரன்
26.01.2025 ல் அந்த முற்றுப்புள்ளிகள்
என்ற தலைப்பில் வந்த
ஈரோடு தமிழன்பன் கவிதை
பற்றிய கவிதை இது.
___________________________________________________
ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதை
27.01.2025
_______________________________________
முந்தாநாளின்
மங்கிய முகம்போல வந்த
நேற்று,
அவன் வாசலில்
கப்பரையோடு வந்து
நின்றான்
அந்த இரவலன்;
ஒன்றுமில்லை போ!
என்று விரட்டிவிட்டது
வீட்டுக்காரன் உறுமல்.
வந்தவன் வயிற்றில்
பசி பற்றி எரிந்தது
மனத்தில் மானம்உடைந்து
சரிந்தது.
எனினும்
தொடர்ந்து
ஐந்தாறுநாள்கள் இப்படியே
பசியின் வெந்த பல்லவியாய்
வந்துவந்து திரும்பினான்
பிறகு
ஒருநாள் அதே இரவலன்
அவ்வீட்டு வாசலில் நின்றான்
ஒரு சரணம்போல!
ஒன்றுமில்லை போ!
வாடிக்கையான
தடித்த
அவ்வார்த்தைகளே மீளவும்
கடித்துக் குதற அவன் மீது
பாய்ந்தன.
கொதிநிலை மிகுந்த
கொப்பள வார்த்தைகளை
அடக்கி வைத்தவனான
அவன்
ஐயா!
இதைநீங்கள்
வைத்துக்கொள்ளுங்கள்
எனக்கு அவ்வப்போது
அங்கங்கு க்கிடைத்தது
உங்களுக்கும் கிடைக்கும் என்று
சொல்லிப் புறப்பட்டான்.
வாசலில் இப்போது
அந்த இரவலன் வார்த்தைகளின்
அர்த்தம் நிரம்பிய கப்பரை.
27-01-202527.01 காலை11-50
அர்த்தம்நிரம்பிய கப்பறை
______________________________________________
கோலங்கள்
__________________________________
பொதுவாக
வயிற்றுப்பசியின் எரிதழல்கள்
செழித்த இந்த குரல்களின்
தேசிய கீதம்
"அய்யா! தர்மம் போடுங்க சாமி!
என்று தான் கேட்கும்.
"அறம் செய்ய விரும்பு"
என்று ஆத்திசூடி குத்தி குத்தி
காட்டியது தான் அது.
"விருப்பம் தான்
ஏங்கிட்ட இரும்பு இல்லையே
அரம் செய்ய"
என்று எகத்தாள நகைச்சுவை
செய்பவர்கள் அதிகம்.
தங்கள் தமிழை தாங்களே
தப்பாக பேசி
அந்த தமிழையே கயிறு ஆக்கி
தற்கொலை செய்பவது போல்
இருந்தால் கூட
அது கொஞ்சமும் உறுத்தாத
மரத்தமிழம் அது!
ஈ என இரத்தல் கூட
இழிவன்று.
ஈயேன் என்பதே அதை விட
இழிவு என்று
நம் "மேல் கணக்கு" "கீழ்க்கணக்கு"
இலக்கியங்கள்
எத்தனையோ முரசு அறைந்த போதும்
ஏதோ ஒரு "பேய் அறைந்தவனாய்த்தானே"
உலவுகின்றான்
நம் வரலாறுகளைத்தொலைத்த தமிழன்.
ஓட்டுப்பிச்சைகளும்
மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன.
பிச்சை போட்ட பின்
பிச்சைக்காரர்கள் ஆகிவிடும்
பொருளாதாரங்கள்
புரியாத அலங்கோலங்கள் தான்
அந்த கப்பறைகளோடு கப்பறைகளாக
கோலம் போட்டுகக்கொண்டிருக்கின்றன.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று உரத்து முழங்கியவர்கள் நாம்.
உலகம் பொது.
காடும் மலையும் பொது.
காற்றும் கடலும் பொது.
மூச்சும் பொது.
முனைப்பும் பொது.
மானிட வெளிச்சம்
பரந்து மலர்ந்திட்ட போதும்
ஒரு திசை இன்னொரு திசையிடம்
கையேந்தி நிற்கும்
குரூரப்பிச்சை நமக்கு என்று புரியும்?
வடக்கு என்றால்
தெற்கு அங்கே
பிச்சை கேட்க வேண்டும்
என்பதா நம் இறையாண்மை?
_________________________________________________
சொற்கீரன்
(27.01.2025 ல்
ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய
கவிதை பற்றிய கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக