கரைந்து போயினவே!
_______________________________________________
விடலைப்பருவத்துப்
பொங்கும் மகிழ்ச்சியின்
கடல் விளையாட்டையும்
கண்ணாடிச்சிறகுகளோடு
மண்டை குலுங்க அதிர்வுகள்
காட்டும்
தட்டாம்பூச்சி வனம் போல
நரம்புகளில்
நிமிண்டிக்காட்டி
நிமிடங்களின் கூர்மையைக்கொண்டு
செதுக்கி விட்டு ஓடும்
காலச்சுருள் ஃபிலிமை
கச்சிதமாய் காட்டி விட்டீர்கள்.
கோலிகுண்டுகளும்
ஆக்கர் அடிகள் வாங்கிய அல்லது
கொடுத்த
பம்பரங்களும் ஊமை விதும்பகளுடன்
நாய்க்குட்டிகள் போல்
பரணில் மவுனமாய் குலைத்துக்கொண்டு
ஆனால் இன்னும்
விழித்துக்கொண்டே தான்
தூங்குகின்றன.
அந்த கம்பத்தில்
சிங்கியடிக்கும் ஒரு
ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத
பொம்மை கண்சிமிட்டிக்கொண்டிருக்க
சவ்வு மிட்டாய்
இழுக்க இழுக்க குற்றால அருவியாய்
அவர் கைக்கு வர
ரோசாக்கலர் மற்றும் வெள்ளைக்கலர்
விழுதுகளாய்
சடக்கென்று அந்த பிஞ்சுக்கையில்
கடிகாரம் கட்டும்.
தேளும் பாம்புமாய் ஊறும்.
மயில் தோகையும் உண்டு
அரை நொடியில்.
அவரிடம்
ஒரு தாஜ்மகால் கட்டிக்கொடு
என்று கேட்கும்
வயது விளிம்பும் கூட
பின் முதுகை சுரண்டிக்கொண்டிருக்கும்.
பால் பிடிக்கப்போகும்
அந்த நெற்கதிர்களின் சிலு சிலுப்புகள்
வரைந்த சித்திரத்தின்
அந்த தூரிகைமயிர்களுக்கு
நரை ஏது? திரை ஏது?
வயதுகள் தோற்று முறிந்து கிடக்கும்.
உற்சாக ஊற்றே எப்போதும்
வில் நிமிர்த்தி
கனவு அம்புகளை மழையாய் விடும்.
கொடுக்கு போன்ற கொடுக்காப்புளியும்
புளியம்பூக்களின் கொத்துகளும்
சுவை கூட்டும் போது
கன்னமும் கண்களும்
கூசிக்கொள்ளும் மெல்லிய கீறல்களில்
மின்னல் எச்சில் நூல் வழியும்.
மறக்க முடியாத
ஒரு வானம்
அந்த வானத்துக்குப்பின்னே இருந்து
இன்றும்
அந்த ஏழுவர்ணத்து ரிப்பன் விளையாட்டு
காட்டிக்கொண்டு தான்
இருக்கிறது.
எத்தனை அழகான அந்த எலிவால்கள்?
பெருமூச்சுகளில்
கரைந்து போயினவே
காலத்தின்
காக்காய் முள் குத்தல்கள்.
_____________________________________________________
சொற்கீரன்.
(பள்ளிப்பருவம் என்ற தலைப்பில்
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
01.01.2025ல் எழுதிய கவிதையின்
கவிதை இது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக