ஒரு பயணம்.
_______________________________________________
முரண்பாடுகள் என்பது
முள்ளுக்காடா?
கள்ளுக்காடா?
இதை வெட்டி எறிந்தால் தான்
விடியற்பூ என்று
கோடரி தூக்கினால்
அசைக்கக்கூட முடியாத
அண்டார்டிக்கா
பனிக்கண்டமாக அது இருக்கிறது.
இதை உருக்க
எத்தனை சூரியன்களை
கொண்டு வருவது?
இந்த அவலங்களின் தொப்பூள் கொடியையே
பிடித்து ஊஞ்சலாடி
ஓட்டுப்பெட்டிகளின்
மூளி இருட்டுகளையெல்லாம்
ஊதி ஊதி
புல்லாங்குழல்களின் மூச்சுக்காற்றை
வைத்து தீர்வு காணலாம் என்றால்
நம் மொண்ணைக்கடவுள்கள்
வழிமறித்துக்கிடக்கின்றன.
முரண்பாடுகளின் சிகரம்
ஏறி விட்டோம் என்று
அப்பாடா என்னும்போது தான்
தெரிகிறது
அது படு பாதாளங்களின்
மரணக்குழி என்று.
எது எப்படி இருப்பினும்
நம் விரல் நுனிகளில்
எரிமலைகள் முட்டையிட்டிருக்கின்றன.
இந்த சீற்றங்களை வைத்து
எல்லாம் நெட்டித்தள்ளி விடுவோம்
என்னும் போது
நம் பங்காளிக்கனவுகள்
நம் இமைகளின் ஓரங்களில்
நம்மை
கழுவேற்றக்காத்திருக்கின்றன.
சொற்களை சரங்கோர்த்து
அந்த துன்பங்கள் என்னும்
இன்பங்களையா
அதோ அந்த தூரத்து தீவில்
தென்னைமரக்கூந்தல் சிலுப்புகளில்
பொதிந்து வைத்திருக்கிறீர்கள்?
வண்ணத்துப்பூச்சிகளின்
வனமா வாழ்க்கை?
என்று
கேள்வியை
ஒரு ரத்தினக்கம்பளமாய்
கவிதை விரித்து வைத்திருக்கிறீர்கள்!
பூக்களில் நடப்பதா என்று
புழுதி மண்டலங்களின்
முகடுகளில்
முகம் கவிழ்ந்து இருக்கின்றோம்.
மீண்டும்
உங்கள் கவிதையின்
கீழிருந்து மேல் ஏறி
அந்த மகுடத்தை எங்களுக்கு
சூட்டியே தீருவோம்!
______________________________________________
சொற்கீரன்.
("இதை என்னவென்பது?" என்று
24--1-2025 ல்
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதைக்குள் நுழைந்து
ஒரு பயணம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக