திங்கள், 27 ஜனவரி, 2025

கோலங்கள்

 கோலங்கள்

__________________________________

பொதுவாக‌
வயிற்றுப்பசியின் எரிதழல்கள்
செழித்த இந்த குரல்களின்
தேசிய கீதம்
"அய்யா! தர்மம் போடுங்க சாமி!
என்று தான் கேட்கும்.
"அறம் செய்ய விரும்பு"
என்று ஆத்திசூடி குத்தி குத்தி
காட்டியது தான் அது.
"விருப்பம் தான்
ஏங்கிட்ட இரும்பு இல்லையே
அரம் செய்ய"
என்று எகத்தாள நகைச்சுவை
செய்பவர்கள் அதிகம்.
தங்கள் தமிழை தாங்களே
தப்பாக பேசி 
அந்த தமிழையே கயிறு ஆக்கி
தற்கொலை செய்பவது போல்
இருந்தால் கூட‌
அது கொஞ்சமும் உறுத்தாத‌
மரத்தமிழம் அது!
ஈ என இரத்தல் கூட 
இழிவன்று.
ஈயேன் என்பதே அதை விட‌
இழிவு என்று
நம் "மேல் கணக்கு" "கீழ்க்கணக்கு"
இலக்கியங்கள்
எத்தனையோ முரசு அறைந்த போதும்
ஏதோ ஒரு "பேய் அறைந்தவனாய்த்தானே"
உலவுகின்றான்
நம் வரலாறுகளைத்தொலைத்த தமிழன்.
ஓட்டுப்பிச்சைகளும்
மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன.
பிச்சை போட்ட பின்
பிச்சைக்காரர்கள் ஆகிவிடும்
பொருளாதாரங்கள்
புரியாத அலங்கோலங்கள் தான்
அந்த கப்பறைகளோடு கப்பறைகளாக‌
கோலம் போட்டுகக்கொண்டிருக்கின்றன.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று உரத்து முழங்கியவர்கள் நாம்.
உலகம் பொது.
காடும் மலையும் பொது.
காற்றும் கடலும் பொது.
மூச்சும்  பொது.
முனைப்பும் பொது.
மானிட வெளிச்சம் 
பரந்து மலர்ந்திட்ட போதும்
ஒரு திசை இன்னொரு திசையிடம்
கையேந்தி நிற்கும்
குரூரப்பிச்சை நமக்கு என்று புரியும்?
வடக்கு என்றால்
தெற்கு அங்கே 
பிச்சை கேட்க வேண்டும்
என்பதா  நம் இறையாண்மை?

_________________________________________________
சொற்கீரன்

(27.01.2025 ல் 
ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய‌
கவிதை பற்றிய கவிதை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக