ஓய்வு வேண்டும்
________________________________________
கடல் அலைகள்
ஓய்வு வேண்டும்
லீவு வேண்டும் என்று
கேட்டதுண்டா?
இது ஒரு சாக்கு போக்கு தான்
கவிஞர் அவர்களே.
உங்களைப்பிரிந்து கவிதையும்
கவிதையைப்பிரிந்து நீங்களும்
பொழுது போகாமால்
என்றாவது
எங்கேயாவது
சொட்டாங்கல்
விளையாடிக்கொண்டிருந்தீர்கள்
நீங்கள் இருவரும் என
கேட்டிருக்கிறோமா?
சொல்லெடுக்க
நீங்கள் சிந்திப்பதும்
உங்கள் காகிதத்தில் வந்து
சொல்லடுக்க உடனே அது
வந்து விடுவதும்
எங்கும் காணாத அநிச்சை செயல்
அல்லவா?
விடுமுறை என்பது
காலத்தை நெட்டித்தள்ள
நாங்கள் ஈ விரட்டிக்கொண்டு
இருக்கும் நாள் அல்லவா?
அன்று கூட
நீங்களும் கவிதையும்
அந்த ஈயும் சிறகுமாய்
எங்கள சிந்தைக்குள்
சிலிர்ப்புகளை அல்லவா
ஏற்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.
பேனாவை வேண்டுமானல்
கொஞ்சம் மூடி வைத்திருப்பீர்கள்.
அப்போதும் பாருங்கள்
அந்த வானம் முழுதும்
பொறி வாணமாய்
உங்கள் எழுத்துக்கள்.
ஒளி
எப்படி
ஒளிந்து விளையாடும்?
___________________________________________
சொற்கீரன்
(லீவு வேண்டும் என்று கேட்ட கவிதைக்கு
அரை மனதாய் விடுமுறை அளித்த
அன்புக்கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை பற்றிய கவிதை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக