மல்லல் பேராறு
--------------------------------------------------------------------------
ஆசையைப்பற்றி
அங்குலம் அங்குலமாக
நகர்த்திக்கொண்டு
சொற்பொழிவுகளை
காப்பி டீ ஆற்றுவது போல்
ஆற்றி
ஆற்றுப்படை சொன்னாலும்
எதற்கும் ஆசைப்படாதே என்ற ஆசையும்
எதற்கும் ஆசைப்படு என்ற ஆசையும் தான்
இங்கே
புலிவேசம் போட்டுக்கொண்டு
ஆடுகின்றன.
ஆசை புலி.
வாழ்க்கை ஆடு.
தீனி புல்லுக்கட்டு.
இதில் ஒன்று ஒன்றுக்கு
தீனி ஆகும் போது
ஒரு தீர்வு வருகிறது.
இடையில்
ஆறு எதற்கு?
படகு எதற்கு?
இதுவே
வாழ்க்கைக்கும் ஆசைக்கும்
உள்ள இடைவெளியைப்பற்றி
பாடம் எடுக்கும் பல்கலைக்கழகங்கள்.
காவி உடுத்துக்கொண்டு வருகின்ற
பாடப்புத்தகங்கள்
வெறும் சொப்பனங்கள் அச்சிட்டு
இருட்டின்
மை வழிந்து கொண்டு வந்தவை.
இதை வேடம் போடுவதும் எளிது.
இதற்கு ஏமாந்து போவது அதை விட எளிது.
இருப்பதை இல்லை என்று சொல்.
இல்லை என்னும்போது
இருப்பதாக ஒற்றைக்காலில் நில்.
இந்த முரண்பாடுகளின் சங்கமம்
கும்பமேளாக்கள் அல்ல.
இதோ
வாழ்க்கை வட்டம் அடித்துக்கொண்டு
மீண்டும்
உன்னிடம் வந்து நிற்கிறது.
இப்போது நீ
வாழ்க்கையை
ஒரு மனிதனின்
பசியாகவும் தாகமாவும் ஆசையாகவும்
கனவுகளாக மட்டும் பார்க்காதே.
மெலிந்து தனித்து ஓடும் நீரின் தடம்
உருண்டு திரண்டு
அதோ அலைகளாய்
பெருங்கடலாய் ஆர்ப்பரிக்கிறதல்லவா
அது தான் சமுதாயம் எனும்
"சோசியல் டைனாமிக்ஸ்".
பெரியாறு
ஓடத்தொடங்கி விட்டது
என்று பொருள்..
"கல் பொருது இறங்கும்
அந்த மல்லல் பேர் யாற்றை"
அதன் அதிர்வுகளை
கணித்துச்சொல்கின்றான்
நம் தமிழ்ப்புலவன் ஒருவன்.
அவன் சிதறவிட்ட அந்த சோழிகள்
இன்னும் இங்கே
கல கலப்பாக ஒலிக்கின்றன
அல்லது
கல கலக்கச்செய்து கொண்டிருக்கின்றன
என்பதை அறிவோம்.
"யாதும் ஊரே!யாவரும் கேளிர்"
ஆம் யாவரும் கேளீர்!
இன்னொன்றையும்
ஆணி அடித்தது போல் அல்லவா
சொல்கிறான்
"தீதும் நன்றும் பிறர் தர வாரா!"என்று.
சொர்க்கம் என்றும் நரகம் என்றும்
கற்பனைச்சவ பெட்டிகளை
மேலிருந்து கீழே எறிவதா
கடவுள் வேடம் போட்டவனின் வேலை?
அதனால் தான்
மனிதன் செய்யும்
கூர்மையான செயல் திறனே
மனிதனை செதுக்கிக்காட்டுகிறது
என்கிறான்.
தானே உந்தி எழுச்சி
பெறுபவன் மனிதன்.
பிறன் விரல்
நிழல் கூட
தருவதும் இல்லை.
தன் நிழலை அழிக்க
அது வருவதும் இல்லை.
ஒற்றைப்புள்ளிகளா மனிதன் ?
இல்லை இல்லை
இல்லவே இல்லை.
மொத்தப்புள்ளிகளில்
ஒருங்கிணைந்தவன் மனிதன்.
அவனது கேளிர் வட்டமே
ஒரு பெரும் சமுதாயத்தின்
தேன் கூட்டு வடிவம் ஆகி ஆகி
மனிதமே அன்பில் இனித்தது.
தன் ஆருயிர் முறைவழிப்படூஉம்
எனத்தெளிந்தனன் ஆதலின்
விலங்கிலிருந்து மனிதனாய்
ஆனவன்
எப்படி மீண்டும் விலங்காய் மாறுவான்?
தர்க்கம் எனும் இந்த "ஆற்றொழுக்கு"
அவன் சிந்தனையிலிருந்து தான்
அந்த சிந்து வெளி நாகரிகத்தை
வெளிப்படுத்தி இருக்கிறது.
எப்படி மனிதனை
மேலோன் கீழோன் என்று
பிளவு படுத்திக்காட்டும்?
ஆகவே சாதிமுறைகளின்
இந்த பொய்மைப்புரட்டுகளுக்கு
ஒரு பெரிய ஆணியை அடித்துத்
தட்டி நொறுக்கி விட்டான்.
இந்த சமுதாயத்தின் மனித சமநீதிகள்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று
கணியன் பூங்குன்றன் முத்தாய்ப்பு
வைக்கின்றான்.
"பெரியோரை வியத்தலும் இலமே.
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே"
_____________________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக