செவ்வாய், 21 ஜனவரி, 2025

அது நீ!

 அது நீ!

_________________________________


அது நீ!

பின் எது நான்?

நீயும் நானும்

கண்ணாடி பிம்பங்கள்.

வெளியே இருப்பவ‌ன் சொல்கின்றான்.

நான் இதோ எதிரே என்று.

உள்ளிருப்பவனும் சொல்கின்றான்

நான் இதோ எதிரே என்று.

நீ

மறைந்து போய் விட்டது.

உலகிலே எல்லோரும் 

நான்களாகத்தான் இருக்கவேண்டும்.

என்று சட்டம் போட்டால் போகிறது.

இப்போது

எங்கே அந்த நீ.

நீ என்று என்னை நோக்கி

நீட்டும் 

விரல்கள் ஏதும் இல்லை.

தன்மை முந்நிலை வேறுபாடு

மறைந்து போகிறது.

என்னை உனக்குத்தெரியுமா?

என்று

ஒரு கேள்வி குடைகிறது.

நான்

அதிர்ந்து போகிறது.

வெடித்துச்சிதறுகிறது.

துண்டு துண்டுகளாய்

கோணா மாணா சில்லுகளாய்.

அந்த கேள்வி மட்டும்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

பாழ்வனம் ஆகிப்போனது.

பட்டாம்பூச்சிகள்

சிள் வண்டுகள்

தட்டாம் பூச்சிகள்

மண்புழுக்கள்

நீர்ப்பாளங்கள்.

தவளைகள் நண்டுகள் மீன்கள்

சூரிய ஒளியின் மினும்னுப்புகள்.

இலைப்பின்னல்கள்

காடு மலைகள்

எல்லாம் இருகின்றன.

நான் இல்லை.

ஆனால் அந்த கேள்வி

இன்னும் இன்னும் இன்னும்..

ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

எங்கும் எதிலும்..

என்னை உனக்குத் தெரியுமா?

குரல்

கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அது

மன சாட்சியா?

ஏலியனா?

ஏ ஐ என்று

முளைத்த ஒன்று

எல்லோரையும் விழுங்கி விட்டு

விழுந்து மடிந்து மக்கிப்போன‌

நான் எனும் என் நிழல்களின்

நிழலா இது?

இப்போது

நீ இல்லை.

நான் இல்லை.

யார்?

எப்போதோ தொலைந்து போன‌

கடவுளா?

இடிச்சிரிப்போடு

குரல் தொடர்கிறது.

நீ சொன்ன‌

கடவுளுக்குள்

உன்னை எல்லாம் 

நீயே தொலைத்த பிறகு

அப்புறமுமா

இந்த நிழல்?

அது என்னவோ தெரியவில்லை.

அது இன்னமும்

குரூரமாய் சிரித்துக்கொண்டிருக்கிறது.

அந்த குதறு ஒலியில்

எல்லா குடல்களும் சரிந்து கிடக்கின்றன்.

பசி மட்டும்

தீயாய் எரிகிறது.

அந்தக் குரல் எரிந்து கொண்டே

ஒலிக்கின்றது.


___________________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக