வாழ்க்கையின் நீள அகலம்
மற்றும் கனபரிமாணத்தை
உங்கள் சொல்லும் பொருளும்
இயைந்த
கவிதையின் வடிவ கணிதத்தை
அதாவது
அந்த "பொயெடிக் ஜியாமெட்ரியை"
அறிந்து வியக்காதவர்கள் இல்லை.
உங்கள் சொல்
கூர்மையாக
நுட்பமாக
பரிணாமம் கொண்டு
நம் செம்மைத்தமிழை
செதுக்கி செதுக்கி
அதன் உயிர்ப்பை செறிவாக்கித்
தருகிறது.
தொல்காப்பியனும் கண்ணகியும்
தமிழின் காலச்சுவடுகள்.
காலமும் வெளியும் சேர்த்துப்
பிசைந்தது தான்
விண்வெளியின் நுண்வெளி
சூத்திரம் என்று
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தந்தது போல்
உங்கள் சொல்லின் ஒலித்துகளுக்குள்
அந்த இன்னிசை அளபடையும்
உயிரிசை அளபடையும்
தந்த மொழியின் பிரபஞ்சம்
உங்கள் கவிதையில்
சிலிர்த்து வியர்க்கிறது.
உயிரும் மெய்யும் உழைத்த
சொற்கூட்டம் அல்ல்வா
உங்கள் படைப்புகள்.
தொடக்கம் எதற்கு?
முற்றும் என்று முடிக்கும்
மரபுகளும் எதற்கு?
உங்கள் படைப்புகளுக்கு
கர்ப்பம் என்றோ
கல்லறை என்றோ
வரலாற்றின்
சில்லறை எழுத்துக்களா
தீர்மானிப்பது?
உருபும் பயனும்
உடன் தொக்க தொகை
என்றொரு வாழ்வியல் இலக்கணம்
நிரம்பித்ததும்பும்
தேனருவிக்காடுகள் அல்லவா
உங்கள் சொற்களஞ்சியங்கள்!
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக