____________________________________________________
இருநாள்கள் விடுமுறையில்
கவிதையேநீ
என்னசெய்தாய்?என்றுகேட்டேன்
போகிறவழியில்
புல்லாங்குழலொன்று
கிடந்தது.
உள்ளே படுத்துத் தூங்கினேன்
கனவில்கூட நீ வரவில்லை!
பள்ளிக்கூட விளையாட்டுத்திடலில்
சடுகுடு விளையாட்டுஆசிரியர்
ஊதாத ஊதி ஒன்று
காற்றுவாங்கிக்கொண்டிருந்தது
அதற்குள் ஒருதடவை
ஓசை எழுப்பினேன்
மூன்றுபேர் வெளியேபோனார்கள்.
அவருள் ஒருவன்
உன்சாயலில் இருந்தான்
நேற்று
வைகறைநேரம்
வானத்துக்கு வண்ணம்அடிக்கவேண்டும்
வருகிறாயா? என்றுகேட்டது.
உன்சொற்களுக்கு வண்ணம் தெரிவுசெய்த
பழக்கம் இருப்பதால் ஒப்புக்கொண்டேன்
மற்றப்படி
மலைகள் வனங்கள் என்றெல்லாம்எங்கும்
போகவிலை
ஆனால்
என்கண்கள் என்தாய்வயிற்றில்
என்னைப்படுக்க வைத்தன
கனவில் நீ வநதாய்
கண்ணீர்மடியில் படுத்திருந்தாய்
சட்டென்று எழுந்துவிட்டேன்.
இன்று
அத்தாய்மடிதான்
உன்மடிக்கு அனுப்பியது;நான்
வந்துவிட்டேன்.
இனிமேல் எப்போதும் விடுமுறை
எடுக்கமாட்டேன் என்றது கவிதை.
என் விடுமுறை தீர்ந்து விட்டது.
_________________________________________
மடியாத மடி தாய் மடி தானே.
அன்பின் நாகரிகத்தின்
உலக முகடுகள் எல்லாம்
மூச்சுகளின் முனை மழுங்காத
சிகரம் தேடிய போது
உயரம் காட்டி நிற்பது அந்த
மாணிக்கத்தொட்டில் தானே.
அது எப்படி
உன் எழுத்து சுவாசத்திற்கு
இரண்டு நாள் விடுப்பு
கொடுக்கமுடிந்தது?
புல்லாங்குழலில் படுத்துக்கிடந்த போது
அதன் கனவுக்கூட்டில்
உன் சொல்முட்டைகள் எதுவும் இல்லையென்றும்
அந்த அக்கினியை குஞ்சு பொரிக்க
வாய்ப்பேதும் நீ தரவில்லை என்றும்
ஏக்கப்பெருமூச்சை
ஆயிரம் எரிமலை வெப்பமாக்கி
தவித்துப்போனதே.
இனி அடுத்தமுறை லீவு ஒன்றும்
கொடுத்து விடாதே.
கொடுத்தால்
அது தான் சாக்கு
என்று ஆரம்பித்துவிடும் அது.
பார்...அந்த கணிப்பொறிகள்
ஏ ஐ யில் ஒரு கவிதை எழுது என்றன.
நானும் தான் ஒரு ஆவேசத்தில்
அங்கும் இங்குமாய்
உன் சில எழுத்துக்களைத்
தூவி விட்டு தான் வந்தேன்.
மறுநாள் செய்திகளில் தூள் பறந்தன.
சுத்த எந்திரத்தனமாக
ஒரு கவிதையை
கோர்த்திருந்தது.
எதற்கு உவமையாக
எதைச்சொல்வது?
எதனின் உருவகமாக
எதனைச்சொல்வது
என்று
அது குழம்பியிருக்கிறது
கடைசி வரைக்கும்
படிக்க பொறுமையில்லை.
அது ஏதோ விரிகுடா கடல் போல்
அலை அலையாக
போய்க்கொண்டே இருந்தது.
சட்டென்று கவனித்தேன்.
வினாயகர் சிவனிடம் ஏதோ
சொல்லி
ஞானப்பழத்தை வாங்கிக்கொண்டாராமே
.... என்று
இப்படி முடித்து இருந்தது.
தமிழ்
தமிழன்பனை எழுதினால் என்ன?
தமிழன்பன்
தமிழை எழுதினால் என்ன?
தமிழ்=தமிழன்பன்
அந்த ஏ ஐ கவிதையை
ரசிக்காதவர்களே இல்லை.
சரி.
என் விடுமுறை தீர்ந்து விட்டது.
இனி
உன்பேனாவிடமும் காகிதத்திடமும் தான்
டியூட்டி
என்று அந்த கவிதை
உங்களிடம் தான்
ஓடி வந்து கொண்டிருக்கிறது.
______________________________________________________
சொற்கீரன்
(இருநாள்கள் விடுமுறையில்
கவிதையேநீ
என்னசெய்தாய்?
என்று கேட்ட கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு
08.01.2025.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக