வியாழன், 23 ஜனவரி, 2025

பட்டனைத்தட்டீட்டு வந்திடலாம்

 

பட்டனைத்தட்டீட்டு வந்திடலாம்

________________________________________



உலகம் உருண்டை என்று

விஞ்ஞானம் நிரூபித்தபோது

உள்ளூர் எருமைய நாயக்கனூர் காரனுக்கு

அது வெறும் மாட்டுக்கொம்பு வடிவம் தான்.

நித்யமும் அனுஷ்டானம் தவறாமல்

சந்தியாவந்தனம் சொல்லும்

சாஸ்திரிக்கு

உஷையும் உச்சியும் அந்தியும்

முணுமுணுக்கும் வேளைகள்.

சமஸ்கிருத மூக்குப்பொடியை

விரீர் என்று மூளையின் முண்டுகளுக்குள்

எல்லாம் பாய்ச்சிடுவார்.

மற்றவர்களுக்கு

அப்படி அப்படியே இயங்க

முறுக்கி முறுக்கி

சாவி கொடுக்கும்

அந்த மாயக்கரங்கள் எவை?

சாதி சம்பிரதயங்கள்

ஆயிரம் ஆண்டுகளை

அவர்கள் மீது அமுக்கி அமுக்கி

அந்த தடித்த வால்மீகி ராமாயண‌

புத்தகத்தின் நடுவில் 

அகப்பட்டு நசுங்கிய‌

கரப்பான் பூச்சிகளைப்போல்

லேமினேட் ஆகிப்போன 

உயிரற்ற படிமங்களாய்

ஊர்ந்து கொண்டிருப்பார்கள்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்

கால் பகுதியும் 

கரையத்துவங்கிய போதும்

விடிவு உதடுகள் பிளந்து

வெளிச்சமாய் ஒரு

கிழக்கு திசையை எப்போது காட்டும்.

கணினி பூதங்களுக்கு

குறைச்சல் இல்லை.

மூக்கு சிந்தி போடும் 

சளிப்படலத்திலும்

கம்பியூட்டர் கிராஃபிக்ஸ் தான்.

பழைய பீமன் கதாயுதமும்

மகாபாரத போர் பாம்பு வியூகமும் கூட‌

ஹாலிவுட்டில் போய்

கிராஃபிக்ஸ் மேக் அப்புகள் அப்பிக்கொண்டு

கூத்துகள் நடத்திக்கொண்டு தான்

இருக்கின்றன.

சமுதாயத்தின் முதுகெலும்பு

வர்ண சாஸ்திர வாத நோயினால்

சடக்கென்று

முறிந்தது முறிந்தது தான்.

அத்வைத சித்தாந்தம் உண்மையாயிருந்தால்

இந்த ஜீவாத்மாக்காரர்களுக்கு

ஏற்பட்ட எலும்புமுறிவு

அந்த பரமாத்மாவுக்கும் ஏற்பட்டிருக்குமே.

இவர்கள் சுக்லாம்பரதரம் 

சொல்லிக்கொண்டிருக்கும் போதே

அந்த கர்மாந்திரத்தை கொஞ்சம் நிறுத்துங்கோ

எனக்கும் முதுகு ஒடிஞ்சு ரொம்பகாலமாயிட்டுதே.

ஏதேனும் வைத்தியம் உண்டா?

அந்த "வைத்தியநாத சாமிக்கே"

வலி தீர ஏதும் வைத்தியமில்லை.

ஒரு பக்தனுக்கு இது தெரிந்து

பைத்தியம் பிடித்து வாய்மொழி குளற ஆரம்பித்தத்தில்

அதுவும் அங்கே ஸ்லோகங்களாக

சப்திக்க ஆரம்பித்து விட்டது.

இந்த லோகம் எப்போ

திருந்தப்போறது?

கெடக்கிறது கெடக்கட்டும்.

நாம் அந்த இ வி எம் மில்

பட்டனைத்தட்டிட்டூ வந்திடலாம்.

மங்களம்

எல்லாம் சுப மங்கள்ம்

____________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக