எனது ஊர்.
__________________________________________
ஒவ்வொரு மனிதனுக்கும்
இன்னொரு கருவறை உண்டு.
அது
அவன் பிறந்த ஊர்.
தாயின் கருவறையில்
உயிரியல் வெளிச்சமும்
எப்போதோ
அவன் தாய் தந்தையரிடையே
பிறந்த காதல் சிலிர்ப்புகளும்
ஒரு தவிர்க்க இயலா
காமத்தின் கனபரிமாணத்தை
உருட்டித்திரட்டி
ரத்த சதைப்புத்தகமாய்
வெளியுலகுக்கு
மனிதக்குஞ்சின் சிறகு பக்கங்களை
விரித்து வைத்து
படிக்கத்தருகிறது.
சித்தர்களும் கண்ணதாசன்களும்
அந்த ஊருக்கு
பெயர்ப்பலகை மாட்டினார்கள்
"கருவூர்"என்று.
பிறகு அந்த இரண்டாவது
கருவறையாய் இருக்கும்
அவன் பிறந்த ஊர்
அவனைப்புரட்டி புரட்டி வைத்து
புழுவாய் பின்
பிஞ்சு கை கால்களில்
சிறகாய் படபடக்க வைத்து
பின் ஒவ்வொரு ஆண்டாய்
ஒரு பத்து பன்னிரெண்டு வயதுகள் வரை
அவனுக்குள்
ஒரு கருவறையைக்கட்டித்தருகிறது.
முதல் கருவறையை விட்டு
வெளியே வந்து
அவன் எழுப்பிய முதல்
தேசிய கீதம்...
வேண்டாம் அந்த குறுகிய
ஓசைக்காடுகளின் சன்னல்...
அவன் எழுப்பிய உலக கீதம்
குவா குவா...தான்.
குழந்தையும் தெய்வமும் என்றெல்லாம்
கொண்டாடுவார்கள்.
பிற்றைக்காலங்களில்
இருவரும் ஒருவருக்கொருவர்
அசுரர்களாக மாறியிருப்பார்கள்.
ஏனெனில்
மனிதன் கற்ற முதல் பாடம்
முரண்பாடு.
ஆனால் பத்து பன்னிரண்டு வயது
சொர்க்கத்தை படைத்துத்தருவது
அவன் பிறந்த ஊரே!
எனது ஊர்
என்று அவன்
இறுதிப்படுக்கையின்
பிணிகளின்..
அந்த அம்புப்படுக்கையில் கூட
"பொன் முறுவலுடன்"
"முற்றும்"எழுதி
என்று மூச்சை நிறுத்திக்கொள்வது
உண்டு.
(தொடரும்)
_______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக