வியாழன், 25 ஆகஸ்ட், 2022

கல்யாண்ஜி எனும் சன்னல்.

கல்யாண்ஜி எனும் சன்னல்.

______________________________________

ருத்ரா



கல்யாண்ஜி எனும் 

சன்னலைத்திறந்தால்

"த்ரு த லுக்கிங் கிளாஸ்" தான்.

எத்தனை வகையான பூச்சியினங்கள்?

புழுவினங்கள்?

பறவைகளின் கண்ணாடிச்சிறகுகள்?

மின்னட்டாம்பூச்சிகள்?

சமுதாயம் மட்டுமே சுடுகாடாய்

அவிந்து கிடக்கும்போது

இத்தனை உயிர்களின் கலைடோஸ்கோப்பிலிருந்தா

நான் 

அந்த "டாஸ் கேபிடலின்"

ரத்தம் மற்றும் வேர்வையை உழுது

வாசிக்கமுடியும்.

ஆம்.முடியும் தான்.

விடியல் என்பது 

சூரியனின் அடங்காப்பிடாரித்தனமான‌

ஒளிக்கூந்தல் மட்டும் அல்ல.

அடி வயிற்றில் மளுக்

எனும் உணர்ச்சி அது.

அது அச்சமா?ஆவேசமா?

"வெளிச்சப்பாடுகளின்" பலவேசமா?

அவரது எழுத்துக்களின்

இந்த அலை விழுதுகளின்

ஆயிரத்தில் ஒரு பங்கின் 

திவலை முத்தத்தை 

அகாடெமி விருதுகள்

ஸ்பரிசம் செய்திருக்குமா?

ஸ்பரிஸம் ஸ்பஷ்டம் ஸ்படிகம்

என்றெல்லாம் அல்லவா 

அதற்கு மூடு வருவதற்கு 

வருடிக்கொடுக்க வேண்டும்.

புலிவேடம் போட்டு ஆடவேண்டியிருக்கும்

என்று சொற்றொடர்களை தோலுரித்து

காரம் தடவி தொங்கவிட்டு

அவருள் இருக்கிற மொட்டை மாடியில்

உலர்த்தி வைத்திருப்பார்.

அப்படி ஆட்டம் போடும் சொல்லாடல்கள் கூட‌

ஊதிபத்தி புகையாய் சுருள்களில்

சொமர்சால்ட் போட்டுவிட்டு கரைந்து விடும்.

கல்யாண்ஜி 

பனை நுங்குச்சொற்களில்

தன் காகிதத்திலிருந்தே

குறுந்தொகைச்சுவையை

நோண்டிக்கொடுத்து விடுவாரே.

கலப்பு மொழிகளின் சில்லாட்டையை வைத்தே

தமிழ் நறவை

பெய்து கொடுத்துவிடுவாரே.

வீட்டுக்கு வாசல்..பொறவாசல் எல்லாம் 

எல்லாம் எதற்கு?

கல்யாண்ஜியின் சன்னல் போதும்.

அங்கேயும் இங்கேயும் 

தாண்டி விளையாடும் பாண்டிவிளையாட்டுக்கு

அவர் 

சொற்களின் சாளரம் போதும்.


_______________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக