தமிழுக்கும் அமுது என்று...
_______________________________________
ருத்ரா
நீண்ட ஒரு பனைமரம்
அதை விட நீண்டதொரு நிழலை
நிலத்தில்
தன் காலடியில் கிடத்தியிருக்கிறது.
சூரியன்
எழும்போதும் விழும்போதும்
அந்த பனைமரம் தனக்குத்தானே
மல்லாந்து மல்லாந்து
மண்ணோடு பிசைந்து கிடந்த
வரலாறுகளின் தன் சுவடிகளையே
எழுதி எழுதி
படித்துக்கொள்கிறது.
இப்படித்தான் அந்த இடத்தில்
இரவுக்குறி கொண்டு
காதலை நுகர்ந்த
ஒரு தலைவனும் தலைவியும்
தடம் விட்டுப்போன
தடம் தெரிகிறது.
ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்னும்
கொங்குதேர் வாழ்கையின் அந்த
அஞ்சிறைத்தும்பிகள்
அங்கு பறந்து பறந்து
துடிப்புகளின் இனிமையை
சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
அது
அகநானூறுகளில்
அகழ்ந்து வந்த இனிப்புகளின்
காலப்பண்டம்.
தமிழே!தமிழே!
இதனால் தான் நீ இன்னும்
தமிழுக்கும் அமுது என்று பேர்
என்று
சூடு கிளப்பிக்கொண்டிருக்கிறாயோ?
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக