நெல்லை கண்ணன்
____________________________________________
ருத்ரா
நெல்லை கண்ணன்
இனி இல்லை
என்று பிரகடனம் செய்யும்
எருமை வாகனப்பிசாசே!
உனக்கு பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும்
பத்தவில்லை என்று தானே
தின்னுவதற்கு
இவன் உடலை எடுத்துக்கொண்டாய்.
இன்றோடு நீ தொலைந்தாய்.
அவன் ஓவ்வொரு அணுவிலும்
எரிமலைத் தமிழ்
கனன்று கொண்டிருக்கிறது.
சாவுக்கணக்குக்கு ஒரு கடவுள்
அதற்கு ஒரு புராணம்
என்று
தமிழர்கள் தவிடு தின்று கொண்டிருந்ததை
தடுத்தாட்கொண்ட
தங்கத்தமிழ் மகன் அல்லவா
எங்கள் நெல்லைக்கண்ணன்.
இறப்பு எனும் இயற்கையைக் கூட
இயல் தமிழ் ஆக்கி
இலக்கியம் ஆக்கும் வல்லவன் அல்லவா
எங்கள் நெல்லைக்கண்ணன்.
யாதானும் ஊராமால் நாடாமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு
என்று
தமிழ் அறிவின் விரிப்பில்
தினம் தினம் படுத்து
தூங்காமல் விழித்து விழித்து
வாழ்ந்தவன் அல்லவா அவன்.
தமிழன் சுட்டுப்பொசுக்கவேண்டிய
தமிழ்ப்பகையை
எரித்து சாம்பலாக்கும்
அவனது திடமான அந்த கனற்கனவு
இன்னும் அந்த கொள்ளிச்சட்டியில் தான்
இருக்கிறது.
அவன் சாகப்போவது இல்லை.
அவனது வீரம் மிக்க
தமிழ்ப்பேச்சுகள் தமிழ் வீச்சுகள்
எதுவும் வெறும் சாம்பலாய்
இந்த தாமிரபரணி ஆற்றில்
கரையப்போவதும் இல்லை.
ஓங்கி உயர்ந்த
ஆற்றங்கரையோரத்து
அந்த ஊமை மருத மரங்களில்
தமிழின் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
அவனது அமுத ஒலிகளாய்
எப்போதும்
கேட்டுக்கொண்டிருக்கும்.
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக