புதன், 3 ஆகஸ்ட், 2022

வலிகள்...ஒலிகள்

 வலிகள்...ஒலிகள்

________________________________________

ருத்ரா




என் முதுகுக்குப்பின்னால்

குறு குறுப்புகள்.

முனகல்கள்.

முள்ளாய் குத்தும்

வலிகள் 

அல்லது

ஒலிகள்.

என்ன அவை?

எதற்கு இந்த வவ்வால்கள் 

கூரிய பற்களுடன் இங்கே

இப்படி சிறகடிக்கின்றன?

பளிங்குப்படலமாய் இருக்கும்

அந்த தடாகம் மீது

ஒரு சின்னப்புல்லின் துரும்பு

விழுந்து

வட்ட வட்டமாய் 

அலகளாய்

அந்த மௌனப்பிசாசுகள்

வாய் பிளந்தன.

சரி போகட்டும்.

இதை வைத்துக்கொண்டு

அந்த நுண்ணிய காமிராக்காரர்கள்

படம் பிடித்து

நம் மனதைப் பிறாண்டி

காயப்படுத்திவிடுகிறார்கள்.

மனம் என்பதற்கு

உடல் தசை ரத்தம் 

இதெல்லாம் இல்லை தான்.

ஆனால் எப்படி

அது குபுக்கென்று 

வாய் வழியாய் மூக்கு வழியாய்

ரத்தம் பீறிடவைக்கிறது?

அச்சம் ...அச்சம்

ஆம் அது தான்

நம் உள்ளுக்குள் நீண்ட‌

நரம்புக்காடாய்

ஒளியும் ஒளியில் ஒளியும் இருளுமாய்

ஒரு பால்வெளி மண்டலத்தின்

பாவாடையை விரித்துக்கொண்டு

கசிவு வெளிச்சக்

கூந்தலை ஆயிரம் ஆயிரம் 

தென்னங்கீற்றுகளாய் சிலுப்பிக்கொண்டு

நம் குருதிக்குமிழிகளில்

பொய்க்கால் குதிரை நடனம்

ஆடிக்கொண்டே இருக்கிறது.

நீக்களே அந்தக்கடற்கரையில்

கோணா மாணாவென்று

கோரைப்பல்லும் குத்து முலையுமாக‌

ஒரு அம்மனைசெய்து

மணற்சிற்பம் ஆக்கியிருக்கிறீர்களே

அதை 

சிதைத்து அழியுங்கள்.

உங்களை நீங்களே நீண்ட‌

அனகோண்டாவாய் 

சுற்றி முறுக்கிக்கொண்டிருக்கிற‌

அந்த ஹாலுசினேஷன் 

சதைப்பிழியலை

அழித்து ஒழியுங்கள்.

ஓடி ஒளிந்து விளையாடு பாப்பா

என்று

உங்களோடு வந்த‌

பிஞ்சு நிழல்களா இப்படி

வயதுக்கு வந்து 

வயதுகள் மீறி

உங்கள் வயதுகளையே

தின்ன வந்திருக்கின்றன.

....

"வேப்ப மரத்துச்சியிலே 

பேயொண்ணு ஆடுதுன்னு..."

பட்டுக்கோட்டையார் அதோ

குண்டு முழங்கி விட்டார்.

இனி எல்லாம் தூள்..தூள்.

வெள்ளி விடியல் பூக்கள்

உங்கள் முகத்தில் 

கிச்சு கிச்சு மூட்டுகின்றன.


______________________________________________________‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக