யுகவிளிம்புகள்
________________________________________
ருத்ரா
அந்த அகலமான தார்சா.
அங்கு நிற்கும் சுண்ணாம்புக்காரையின்
தூண்கள்.
பற்கள் தேய்ந்தும் துருத்தியும்
தெரிவது போல்
செங்கற்சிதிலத்தோடு
அந்த தூண்கள்.
வாசல் முற்றம் ஏதோ ஒரு
சரித்திரத்தைச்சொல்லிக்கொண்டே
இருக்கும்.
அந்த மணவடை சதுரக்கல்லில்
எங்கள் அண்ணன்மார்களுக்கு
நடந்த திருமணத்தோரணங்கள்
அசைந்து அசைந்து
குருக்களின் மந்திரங்களையும்
சுருட்டி சுருட்டிச் சொல்லிக்காட்டும்.
அவர்கள் வாழ்க்கையில்
துவங்கிய வசந்தங்கள்
இன்னும் பூமயிர் மின்னல்கள்
அரும்பு மீசையாக பரிணாமம் ஆகாத
எங்களுக்கும்
அதாவது
எனக்கும் என் தம்பிக்கும் கூட
மத்தாப்பு வெளிச்சம் காட்டும்.
கல்யாண வீடு களை கட்டும்
அந்த பெட்ரோமேக்ஸ் ஒளிவெள்ளம்
ஏற்படுத்தும் நிழற்கோடுகளில் எல்லாம்
உற்சாக ஓவியங்கள் தான்.
காலம் எப்படி இப்படி ஒரு
அசுரன் ஆகிப்போனான்.
இன்று பேரன்மார்கள் பேத்திமார்களின்
திருமணங்கள்
அதே மகிழ்ச்சி கொப்புளிக்கும்
நிகழ்வுகளாக இருந்த போதும்
புன்னகைகளும்
சிரிப்புகளும்
பேச்சுக்கொத்துகளின்
பரிமாறல்களும்
ஆன் லைன் நிழற்படத்தொகுப்புகளில்
வாட்ஸ் அப் ஆல்பங்களில்
வேக வேகமாக பாயும் யுகவிளிம்புகளாய்
பாய்ச்சல் காட்டுகின்றன.
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக