தப்புத் தாளங்கள்
______________________________
என்னடா?
பொல்லாத வாழ்க்கை?
இப்படி ஒரு பாட்டில் அற்புதமாய்
நடித்திருந்தீர்கள் ரஜனி அவர்களே!
அதில் இப்படித்தான்
ஒரு உள்ளொலி கேட்டது எங்களுக்கு.
"என்னடா
பொல்லாத ஆத்மீகம்?"
இருந்தாலும்
அதைத்தேடி இமயமலை உச்சி வரைக்கும்
அடிக்கடி போய்க்கொண்டிருந்தீர்கள்.
அதை பார்த்தீர்களா
என்பது உங்களுக்கே தெரியும்.
இருப்பினும்
"ரஜனி பாபா"
என்று உலவுகிறீர்கள்.
தமிழ் மொழி
ஒரு ஆழ்ந்த செறிந்த மொழி.
மனிதன் என்ற சொல்
மன்னு எனும் "நிலைத்த" பொருளை
அது உணர்த்துகிறது.
மனிதனே உலகப்பரிணாம படலத்தில்
நிலைத்து நிற்பவன்.
அவன் "மனம் எனும் சிந்தனை"
விளையாட்டில் பந்து உருட்டி விளையாடியபோது
கண்டுபிடித்ததே கடவுள்.
ஆனால் பாருங்கள் அவன் கண்டுபிடித்ததே
அவனை இப்போது பேயாய் ஆட்டுகிறது.
மனிதன் எதையும் "ஆளும்" ஆள்.
இந்த "ஆள்மை"யே மீண்டும்
இங்கே ஆத்மிகம் ஆகி உள்ளது.
(இதைத்தான் இந்தியில் ஆத்மி என்கிறார்கள்.)
சமஸ்கிருதமும் தமிழைத்தழுவிக்கொண்டது.
அது ஆத்மாவை(மனிதன் தன்னையே அறிவதே)
பிரம்மம் என்று பிரகடனப்படுத்திக்கொண்டது.
தமிழ் "பிறமம்" எனும் பிறப்பே
இங்கு பிரம்மம் ஆகிறது.
பிரம்ம சூத்திரத்தின் இரண்டாவது
சுலோகமே
பிறப்பு முதலியவற்றை அறிவதே
பிரம்மம் என்கிறது.
ஆம்.
மனிதன்
சக மனிதன் உதவிக்குத்தான்
பிறக்கிறான்.
அப்புறம் அதில்
நான்கு வர்ணம் ஐந்து வர்ணம்
மற்றும்
மனிதனுக்கு மனிதனே தீட்டு
என்று சொல்வது
எத்தனை பித்தலாட்டம்?
அன்பான ரஜனி
அவர்களே
ஆத்மீகம் என்பதில்
எங்களின் தமிழ் வெளிச்சம்
இத்தனை கோடி சூரியன்களாய்
இருக்கும் போது
நீங்கள் அந்த இருட்டறையில் போய்
ஏதோ ஒரு இருட்டைப்பிடித்து வந்து
தமிழ் நாட்டின் தலையில்
கட்டப்பார்க்கிறீர்களே
இது அறமா?
ரஜனி அவர்களே
தமிழ் நாட்டில் இருந்து கொண்டு
தமிழின் "ஆத்மாவுக்கே"
கோடரி போடும் வேலையை
முதலில் தூக்கி எறியுங்கள்.
முரசுக்கட்டில் எனும் மண்ணின் மானம்
எனும் அடையாளத்தை
களைப்பு மிகுதியால்
அதில் போய் படுத்து அவமதித்து விட்டார்
ஒரு தமிழ்ப்புலவர்.
அவரை வாளால் வெட்ட முனைந்த
மன்னனுக்கு
அவரது தமிழ்
உயிர் வெளிச்சமாய் அல்லவா
தோன்றி இருக்கிறது.
அதனால் வெட்ட வந்த வாளைத்
தூக்கி எறிந்தான் மன்னன்.
ஆனால் நீங்கள் அப்படியில்லையே
தமிழை அவமானப்படுத்தவே
தமிழ் நாட்டில் இருப்பது போல் அல்லவா
இருக்கிறீர்கள்.
தமிழ் வரலாற்றையே பிய்த்து எறியும்
நோக்கத்தில் அல்லவா
இருக்கிறீர்கள்.
இருப்பினும் நீங்கள் எங்கள்
"தமிழ்ப்பட உலகின் கலைஞர்"
என்னும்
உணர்வு அல்லவா
உங்களை திருப்பி திருப்பி
தூக்கிப்பிடிக்கிறது.
ஆம்.
மீண்டும் சொல்கிறோம்
அந்த மன்னன் விட்டெறிந்த வாளை
கையில் எடுத்துக்கொண்டு
நீங்கள்
இந்த (தமிழ்)மன்னனை
வெட்ட வேண்டும் என்பது தான்
நீங்கள் எங்களுக்கு வெளியே சொல்ல
விரும்பாத அர்சியலா?
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமையும்
நாகரிகம் எங்கள்
நாகரிகம் என்பதையும்
நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள்
என நாங்கள் நினைக்கின்றொம்.
திருக்குறள் எனும் பொதுமொழியின்
மூச்சுக்காற்று தானே
இந்த தமிழ் நாட்டில் உங்களின்
மூச்சுக்காற்றாக இருக்கிறது.
அன்பான ரஜனி அவர்களே!
பண்பான ரஜனியாகவும்
நீங்கள் இருக்கவேண்டும் என்றே
உங்களை வாழ்த்துகிறோம்.
வாழ்க நீவிர் நீடூழி!
______________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக