"கல்லிடைக்குறிச்சி"
______________________________
ருத்ரா
கல்லிடைக்குறிச்சி
என்று
சொல்லிப்பாருங்கள்..
அது
எனக்குள் அந்தக்காலத்து
கிராமஃபோன் காந்தஊசியாய்
வட்ட வட்ட அலைகளை
தொட்டுப்பிடிச்சு விளையாடி
ஒரு இனிய பாட்டை
ஒலித்து ஒலித்து எதிரொலிக்கும்.
"வாராய்...நீ வாராய்..."
மந்திரி குமாரியில் வரும் பாட்டு.
நானும் என் தம்பியும்
அம்பை எரித்த சடையாய் கோவில் வழியே
நடந்து வரும்போது
அந்த வயல்களின்
பச்சைக்கம்பள விரிப்புகள் இடையே
தாமிர பரணியும்
கன்னடியன் வாய்க்காலும்
எங்க்ளோடு நடந்து ஓடி
நெளிந்து ஆடி வரும்
காட்சிப்படலங்கள்
அந்த பாட்டையும் ஒரு
அமுதப்பிசையலாய்
.......
எதை நினைப்பது
எதை எழுதுவது...
கல்லிடைகுறிச்சியில்
கீழாறு என்று
ஒரு இடம்.
பொருனையின் பொற்தடங்கள்
நாணற்கீற்றுகளின்
மெல்லிடைவெளியில்
க்ளுக் என்ற குமுக்குச்சிரிப்பை
மறைத்து மறைத்து
இசைக்கும் அந்த ஒலி!
அது யார்?
ஆறா?
சின்ன சின்னக்கூழாங்கற்களின்
கேளா ஒலிகளின்
கலித்தொகையா?
அது
இந்த பளிங்கு ஆறு எழுதிய
ஆற்றுப்படையாய்
வரி வரியாய்
என்னைச்சூழ்ந்து வருகிறது.
ஓ!கல்லிடைக்குறிச்சியே!
அந்த ஆற்றுத்திடலின்
"முதலைப்பாறை"
இதோ
இன்னும் வாய் பிளந்து
என்னைத்
தின்னக்காத்திருக்கிறது.
ஆண்டுகள்
விழுங்கப்பட்டன.
ஆற்றின் குமிழிகளில்
இன்னும் சுழித்து ஓடுகின்றன
அந்த நினைவுகள்.
__________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக