வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

வண்ணதாசனும் கிண்ணம் ஏந்தினான் (1)

 வண்ணதாசனும் கிண்ணம் ஏந்தினான் (1)

_____________________________________________


(அது என்ன 

போதை வேண்டுமென்றால்

பேட்ரிக்கட்டை நவச்சாரம் 

சமயத்தில் பல்லி பாச்சாவெல்லாம்

போட்டு காய்ச்சுவார்களாமே.

காய்ச்சும்போதே இந்த முரட்டுத்தனமான‌

போதை என்றால் என்ன ஆவது?

"கள்ளோ?காவியமோ? என்று

டாக்டர் மு.வ‌

நீண்ட தூர மைல்களின் 

நாவலுக்கே 

தமிழ்ச்சொல்லாடலின் 

நொதிப்பையும் நுரைப்பையும்

"மணிமிடைப்பவளம்" ஆக்கி

நம்மைக் கிறங்க அடித்திருக்கிறார்.

வண்ணதாசன் அவர்களின் 

கவிதைக்கு..

அந்த சரக்கு சேர்மானங்களில்

எத்தனையோ வானங்கள் கிடக்கும்.

வானவில்கள் எத்தனையோ

ராமன்கள் சீதைகள் இல்லாமலேயே

முறிந்து கிடக்கும்.

வாயை வாயை வலித்துக்காட்டும்

ஓணான்களும் உண்டு.

அவை அத்தனையும் 

சமுதாய வக்கிரங்களை

வதைக்கும் நையாண்டிகள்.

அவர் கவிதைக்குள் நெளிந்து  நெளிந்து

ஊர்ந்து வந்து விட்டபிறகு

வெறும் மண்புழுக்கள்

சுநாமிகளை கரு தரித்துக்கொண்டு

வந்து நிற்கும்...

போதும் முன்னுரை.

இந்த சில்லுண்டிக்கவிஞனின் 

வில்லுப்பாட்டையும் 

கொஞ்சம் கேளுங்கள்.)


"சிறுவனின் கையில் கருங்கல் ஜல்லி..."

இப்படித் தொடங்குகிறது.

வண்ணதாசனின் கவிதை.

___________________________________________________




வண்ணதாசன் 

கவிதைக்கு

பேனாவை தூர எறிந்துவிட்டு

காமிராவை கையில் எடுத்திருப்பது

தெரிகிறது.

அந்த லென்ஸில்

தமிழ்ச்சொற்கள்

பூதமும் காட்டுகிறது

பூச்சாண்டியும் காட்டுகிறது.

அந்த கருங்கல் ஜல்லிக்குள்

சுருண்டு படுத்திருக்கும் 

மலைத்தொடர்கள்

சிறுவனின் கைக்குள்

அகப்படும் விதம் நம்மை

திடுக்கிடவைக்கிறது.

அவன்

தன்னம்பிக்கையின் கனம் 

ஆயிரம் இமயங்களுக்கும் மேல்

இருக்கும் போல் இருக்கிறது.

மகாபாரதம் எனும் 

அந்த மொத்த அம்புக்கூடமும்

ஏகலைவன் எனும் 

தீண்டத்தகாதவனின் 

வெட்டப்பட்ட கட்டைவிரலில் அல்லவா

கூர் பாய்ச்சி நிற்கிறது.

வெட்டச்சொன்னது

வியாசனா?

துரோணாச்சாரியனா?

அச்சிறுவனின் குறி

இதோ இந்த மலைப்பிஞ்சில்

மையம் கொண்டிருக்கிறது.

வானத்திலிருந்து வந்த ஒலி வேதம்

அதைக்கேட்டு எதிரொலித்தாலே

எச்சில் பட்டு போகும் என்று

எத்தனை நூற்றாண்டுகளை

வெட்டி பலி கொடுத்திருக்கிறார்கள்.

வானத்திலிருந்து விழுந்த எல்லா ஒலிகளையுமா

பொறுக்கிக்கொண்டார்கள்.

அவர்களுக்கு அகப்படாத ஒலிகள் எல்லாம்

என்ன ஆயிற்று?

யார் கண்டது?

ஒரு வேளை அவை கூறியிருக்கலாம்

"சூத்திரர்களே பிரம்மபுத்திரர்கள் என்று"

அந்த சிறுவன் அந்த இமயமலையின்

அபாமினபிள் மேன் எனப்படும்

"அசுர தேவனாக"இருக்கலாமோ?

வண்ணதாசன் கவிதைப்போர்வைக்குள்

மீண்டும் நுழைந்து

ஒரு கனவுத்தூக்கம் போடப்போகிறேன்.

_____________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக