சனி, 27 ஆகஸ்ட், 2022

தரிசனம்.

தரிசனம்

_____________________________________________

ருத்ரா



என் கால்கள் தளரவில்லை.

பாதையின் நீளம் 

எங்கோ இழுத்துக்கொண்டு

போகிறது.

எதைத் தேடி

என்ற கேள்வி மட்டும்

பனிப்படலத்தில்

தூரத்து வைரப்புள்ளிகளாய்

போக்கு காட்டுகின்றன.

அதை இதைத்தேடி

இதற்கு ஏதோ கபாலத்தின்

சந்நிதானத்தில்

இருக்கும் மூளையின்

சுருள் கூட்டுப்புழு மண்டலம் போய் 

நெளிந்து கொண்டிருக்கவேண்டும்.

எதைத் தேடுகிறோமோ

அது கடவுள்

என்று என் சுகமான தியானத்துக்குள்

வந்து அந்த 

புலித்தோல் அல்லது மான்தோலில்

ஒரு பொமரேனியனாய்

நீள நாக்கில் தொங்க தொங்க‌

நீர் சொட்டிக்கொண்டு....

ம்ம்ம்

நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்

என்பதே

எனக்கு இன்னும் வேட்டை.

என் வில் அம்புகளில்

ரத்தம் சொட்டிக்கொண்டு

நீ தாழ்த்தி

நான் ஒசத்தி 

என்று

வெறித்தீயில் பொய் எனும் 

நெய் வார்த்து

மானிடம் எனும் 

தெய்வ ஒளியையே

சுட்டுத்தின்று

வறுத்துத் தின்று

தேடிக்கொண்டே இருக்கிறேன்.

போதும்டா..

போங்கள்டா..

இங்கிருந்து கலைந்து சென்று.

என்று

கடவுள் முனகுவதும் கேட்கிறது.

மறுபடியும் 

எதைத்தேட என்று தெரியவில்லை.

பாதயாத்திரை போகிறேன்

பல நூறு மைல்கள்.

அல்லது

ஹெலிகாப்டரில்

இமயமலை மடிப்புகளுக்கு செல்கிறேன்.

எங்கு வேண்டுமானாலும்

செல்கிறேன்.

எதைத்தேடுகிறேன் என்பதே

இன்னும் அந்த கேள்வி.

ஆயிரம் சாதிகளை வைத்துக்கொண்டு

துண்டு துண்டாய் கோடரி போட்டு

யாரோ ஏதோ சொன்ன‌

புரியாத சொற்சிதலங்களுக்காக‌

உடன் வாழ் மனிதர்களையெல்லாம்

உப்புக்கண்டம் போடவும் தயார் ஆகிறேன்.

தேடுவதை எல்லாம் விடு.

என்று அது சொல்கிறது.

உள்ளிருந்து

அழிவு உமிழ் மந்திரங்கள்

பீறியடிக்கின்றன.

இப்போதும் தேடுகிறேன்.

எதிரிகளைத் தேடுகிறேன்.

மங்கலாகத்தெரிகின்றனர்.

ஒரு முறை கண்ணாடிப்பிம்பத்துள்

பார்த்துவிட்டேன்.

ஆம்..அவன் தான்.

விடாதே.விரட்டு..அழி.

மனிதனை மனிதனே அழித்துக்கொள்ள

தேடும் வேட்டை.

என்னையா தேடுகிறேன்.

இது உக்கிரம் பெறுகிறது.

இன்னும் 

எதைத் தேடுதல் என்று இல்லாமல் வெறும் 

வெறியை மோப்பம் வைத்து

தேடுகிறேன்.

முரட்டு மோதல்கள் 

சிவப்புச்சகதியில் புதைகின்றன.

எங்கு பார்த்தாலும்

மனிதம் எனும் அடையாளம் தொலைந்த

ஆரண்யங்கள் தான்.

அவலங்கள் தான்.ஓலங்கள் தான்.

தலைகளையெல்லாம்

பறித்து விட்ட பின்

முண்டங்களின் கூட்டங்கள்

பாடிக்கொள்கின்றன.

ஆடிக்கொள்கின்றன.

இரைச்சல்களின் காடுகள்.

முண்டகோபனிஷதம் என்ற

மொட்டை வானம்

சொட்டை பூமி..

இப்போது

கோடிக்கோடி கடவுள்கள்

கடுந்தவம் இருக்கின்றன...

ஒரு மனித தரிசனத்துக்காக!



___________________________________________________










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக