செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

காதல் வாழ்க!

 காதல் வாழ்க‌

______________________________



உன் கொலுசுவின் அமுத ஒலிகள்

என்று

அயோக்கியத்தனமாய் 

ஒரு கவிதை எழுதுவேன்.

அதன் ஒலி வைத்து உன்னை

உளவு பார்க்கவே அது.

நீ எங்கெல்லாம் போகிறாய் 

என்று கங்காணி வேலை செய்யவே அது.

உன் வளையல் ஒலிகள்

கிளு கிளுக்க வைக்கிறது என்று

போலித்தனமாய் சொற்கள் வடித்து

உன்னை கிளுகிளுக்க வைப்பதற்கே அது.

அதுவும் உன் ஒலியை 

பின் தொடர்ந்துவந்து கட்டிவைக்கும்

கண்ணுக்குத்தெரியாத சங்கிலி.

இறுதியாய்

மாங்கல்யம் தந்துநானே...

சமஸ்கிருதத்தில் ஸ்பஷ்டமாய் ஸ்ருதி கூட்டுவேன்.

உன்னை 

எங்கள் சமையல் அறையிலும் 

பள்ளி அறையிலும் 

கட்டிப்போடத்தான் அது.

ஏமாற்றுவது வீரம்.

ஏமாறுவது காதல்.

இந்த புறநானூறும் அகநானூறும்

நம் கைநிறைய உண்டு.

பெண்ணே!

உன் உறுதி உடைபடும்

இடம் 

அந்த நாலு ஜியோ அஞ்சு ஜியோ 

வைத்திருக்கும் கைபேசி தானே.

கண்ணும் கண்ணும் பேசினாலும் சரி

செல்லும் செல்லும் பேசினாலும் சரி

செல்லாத நாணயங்களே உன் காதல்.

விலங்குகள் காதலிப்பது இல்லை.

அதனால்

விலங்குகளுக்கு விலங்குகள் இல்லை.

இருந்தாலும் 

சொல்லித்தொலைவோம்

காதல் வாழ்க!


_____________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக