திங்கள், 22 ஆகஸ்ட், 2022

திலி டவுண்

 திலி டவுண்

____________________________________________

ருத்ரா




திருநெல்வேலி என்ற‌

பெயரை மறக்கடித்தன‌

அந்த டவுண்பஸ்கள்.

அதிலும் அந்த 

"திலி டவுண்" 

நான் வார்வைத்த கால்சட்டைகள்

அணிந்த காலத்திலேயே

என் டவுசர் பாக்கெட்டில் 

போட்டு சவசவத்துப்போன‌

கிளி மயில் பாம்பு என்ற‌

சவ்வுமிட்டாய்கள் போன்று

அத்தனை அத்துபடி.

திலி டவுணில் அந்த‌

நாலு தெருவும் சுத்தியாயிற்று.

சந்திப்பிள்ளையார் கோவில் 

அருகில் பிடித்த லாலாக்கடை 

அல்வா வாசத்தை வைத்துக்கொண்டே

கூலக்கடை பஜார் முனையில்

கொஞ்சம் நிற்பேன்.

அந்த சந்துக்குள்..

அப்பவே அங்கு சிமிண்டு ரோடு..

புகுந்து வழுக்க ஓடை வயல்காட்டு 

விரிப்பு வரைக்கும்

நடை போடுவேன்.

மூணாப்பு நாலாப்பு 

கோடை லீவு பூறாம்

இப்படி எங்க அண்ணன் வீடும்

சிந்து பூந்துறை பெரியம்ம வீடும் தான்.

அந்த நாட்களையெல்லாம்

அப்படி ஒரு கோலிவிளையாட்டு

பளிங்குக்காய்களாய் மாற்றி

அதே டவுசர் பாக்கெட்டில்

கிளிங்..கிளிங் என்று

சப்தம் போடும்படி 

நடப்பது இன்னும் இன்னும் 

பச்சையாய்

குறுக்குத்துறைச்சலையோரத்து

மருத மரக்கொளுந்து இலையின்

செம்புப்பழுப்பில்

படம் காட்டிக்கொண்டிருக்கிறது.

அப்போது இன்னும் 

ரத்னா டாக்கீஸ் எல்லாம் வரவில்லை.

ரெண்டுபுறமும் வயல்.

ஊடே ஒரே தார் ரோடு.

இந்த டவுண் ஆர்ச்சிலிருந்து

அந்த பாளையங்கோட்டை

ஊசிக்கோபுரம் வரை

இந்த திலி ஒரே

பச்சைப்பாலைவனம் தான்.

இப்படித்தான் 

"பேக் டு தெ ஃப்யூச்சர்"மாதிரி

"பேக் டு தெ பாஸ்ட்"என்று

எங்கள்

திலி டவுணையும் 

திலி ஜங்க்.ஐயும்

அவல் மாதிரி 

அசைபோட்டுக்கொண்டிருப்பேன்.

"அம்பதுகளே"

உங்களை அந்த ஆற்றுமணல் மாதிரி

அள்ளிப்போட்டுக்கொண்டே

தாமிரவருணியையே

சவ்வுமிட்டாய்க்காரன்

அந்த "நாராசக்குழாயை" ஊதி ஊதி

குங்குமக்கலர்ச் சவ்வை 

இழுப்பானே 

அது போல 

இழுத்து இழுத்து 

ஆற்றிக்கொண்டிருக்கிறேன்.

அவ்வளவும் ஆற்றாமையின் என்

மாணிக்கக்கற்கள்.


_______________________________________________________









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக