செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

"விநாயகனே..வினை தீர்ப்பவனே..."

 ஆம் 

வந்துவிட்டோம் 

அந்த தெருவின் கடைக்கோடிக்கு.

குப்பைகளின்

அந்த திறந்த வெளி மியூசியத்தில்

எல்லாம் காட்சிக்கு வந்தன.

குடல்கள் வெளித்தள்ளியது போல்

ஒரு மெத்தை.

கூடவே தலையணை சிதைந்து

பிரபஞ்ச பிசிறுகள் போல்

பஞ்சின் கனவுகள்.

முற்றுப்பெறாத தூக்கமும்

"முற்றும்"போட்டு விட்ட‌

ஒரு அரைவேக்காட்டு வாழ்கையின் 

நாவலும் அங்கே குவியல்.

இன்னும் நாட்பட்டு பழுப்பும் ஏறிவிட்ட‌

எச்சில் இலைகளின் கிழிசல்கள்.

ஏன்

வீசியெறிந்த செல்ஃபோன் மிச்சங்களும் தான்.

நரம்புகள் போல் அதனோடு

பின்னிக்கிடக்கும் "வயர்"கள்...

எது குப்பை?

எது பொக்கிஷம்?

நேற்று கொண்டாடி முடித்த 

தோரணங்களும் அங்கே தான்.

அவை

எழுபத்திஅஞ்சு ஆண்டுகளின்

குப்பையா?

பொக்கிஷமா?

வழிபாட்டு அவதாரங்களின் பொம்மைகள்

கை உடைந்து கால் உடைந்து

மூக்கு பெயர்ந்து

அறுந்து தொங்கும் துதிக்கையோடும்

கீறல் விழுந்த தொந்திகளோடும்...

ஆனல் இவற்றோடு

அறுபட்ட "மானிடத்தின்"கழுத்துக்களோடும்...

தூரத்துக்கோவிலின் ஒலிபெருக்கி

பாடிக்கொண்டிருந்தது

"விநாயகனே..வினை தீர்ப்பவனே..."


___________________________________________________________

கவிஞர் ருத்ரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக