எனது மைல்கல்.
______________________________________________
ருத்ரா
அம்பதுகளில்
மூன்றாவது நான்காவது
வகுப்பில்
சிலேட்டில் கருப்புக்குச்சி வைத்து
கணக்குப்பரீட்சைகள் கூட
எழுதியிருக்கிறோம்.
ஒன்பது வரை எண்கள்
அப்புறம் ஒரு முட்டை
பூஜ்யம்
இதை வைத்து கோர்த்து கோர்த்து
எழுதிய சங்கிலித்தொடர்கள் தான்
எங்கள் கையிலும் காலிலும்.
உயர் நிலை பள்ளி சென்ற
பிறகு தான்
அறிவின் சுவாசத்தோடு சுதந்திரம்.
அப்போதும்
மனப்பாடம் மனப்பாடம்....தான்.
மண்டை வீங்கிப்போகும்.
கண்ணாமுட்டைகள் பிதுங்கிவிடும்.
இதை வைத்து
வகுப்பில் முதல் எனும் கிரீடம்
சூடிக்கொண்ட போது
வேறு எந்த எவரெஸ்ட் சிகரம் எல்லாம்
என் கண்ணுக்குத்தெரியாது.
கல்லிடைக்குறிச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து
மணிமுத்தாறுக்குப்போகும்
அந்த கணவாய்ப்பதையை ஒட்டியுள்ள
அந்த கல் குன்று மீது
ஒரு கொடியை ஏற்றிக்கொண்டு
நிற்கும் பாவனை மட்டுமே
எனக்குள் பட படக்கும்.
மத்தியானச்சாப்பாடு
எனும் அந்த தயிர்ச்சோறு
அம்மா பக்குவமாய் அரைத்துத்தந்த
தேங்காய்த் தொவையல் சகிதம்
அலுமினிய டப்பாவில்
என் புத்தகப்பைக்குள் தான்
அடைகாத்திருக்கும்.
பள்ளியின் அருகில்
மாஞ்சோலை டீ எஸ்டேட் நடேச அய்யர்
பங்களா முற்றத்தில்
தயிர்ச்சோறு ருசியாய் இருக்கும்.
அந்த பங்களாவின் மாஞ்சோலையும்
மரகத மணிகளாய் மாவடுக்களை
காற்றில் கிலு கிலுப்பை போல்
அசைத்து ருசியான காட்சிகளை நல்கும்.
சாப்பிட்டு முடித்து
அந்த ரயில் கேட் மீது ஏறி நின்று
அதே சமயத்தில் அங்கே
சரியாக வரும் தென்காசி ரயிலுக்கு
கை காட்டி விட்டு விளையாடிய பின்
பள்ளிக்கு மதிய வகுப்புக்கு வந்து விடுவோம்.
திலகர் வித்தியாலய உயர்நிலைப்பள்ளி
வெறும் பள்ளி அல்ல.
பாடப்புத்தகத்தில் குட்டிபோட
செருகிவைக்கும் மயிற்பீலி அல்லவா அது.
குட்டி போட்டதா என்ற
கேள்வி அப்படியே தான் இருக்கிறது.
"பீலிபெய்ச்சாகாடும் அச்சிறும்..."
என்ற மாணிக்க விடை ஒன்று
அங்கு கண்ணில் காட்டப்படுகிறது.
என் கல்விக்காக
என் தந்தை சுமந்த சுமையில்
எத்தனையோ மயில்கள் அகவி அகவி
வலித்தொகைகள் பாடியிருக்கின்றன.
நிகழ்வுகளில் முண்டாசு கட்டிக்கொள்கிறேன்.
இது என்ன?
அவ்வளவு சிறப்பான அத்தியாயமா?
வாழ்க்கையின் ரோடு ரோலர்களின் அடியில்
நசுங்கித்தெறிக்கும்
கூழாங்கற்சிதறல்களாய்
இருந்த போதும்
யாரோ எழுதிய முகம் தெரியாத
நாவலில் ஊர்ந்து கொண்டிருக்கும்
எழுத்துக்களாய்
என் உள்மனக்கிளர்ச்சியின் படுகையில்
பச்சைக் குத்திக்கொள்கிறேன்.
வயதுகள் திடீரென்று மைல்கல்லை
காட்டுகின்றன எண்பது என்று.
இருக்கட்டும்.
எண்ணிக்கைகளுக்கு ஏது
இதயமும் துடிப்பும்.
___________________________________________________________