சனி, 16 டிசம்பர், 2017

"அருவி"

"அருவி"
=====================================ருத்ரா

கொட்டோ கொட்டென்று
கொட்டுகிறாள்.
ஒரு நயாகராவைப்போன்ற‌
பெண்ணியத்தின்பிரமாண்டம்
ஆனால்
ஒரு கும்பக்கரை போல்
"க்ளுக்"சிரிப்பு போல்
பிச்சிப்பூக்களின் அருவியாய்
அதிதி பாலன்..
அற்புத முக பாவனைகள்.
கதாநாயகி என்றால்
எத்தனை அடாவடித்தனத்தை
காட்டவேண்டும்?
கண்ணி வெடியா இவள்?
கடைசி வரை
வெடிக்கவே இல்லையே.
ஆனால்
வெடித்துவிட்டால்
எவ்வளவு சிதிலங்கள் ஆகவேண்டுமோ
அதையும் விட ஆயிரம்
கோரமுகங்களை
பாலியல் புரிதல் நோக்கிய‌
மனிதனின் வக்கிரங்களை காட்டுவதில்
மௌனமான‌
ரங்கோலிகளாய் விரிக்கின்றாள்.
கூட வரும் அறைத்தோழி
திருநங்கை
ஒட்டுமொத்த பார்வையாளர்களின்
உருவகமா?
இந்த போலிகளுக்கு
ஆண் என்றும்
பெண் என்றும்
அடையாளங்கள் எதற்கு?
விற்கப்பட்ட பொருளின்
"லேபிள்" உரித்தபின் உள்ள‌
மனநிலையில்
வரும்
எரிச்சல்
அல்லது
ஏமாற்றம்
அல்லது
சமாளித்துக்கொண்டு
கொஞ்சம் சந்தோஷப்படுவது
போன்ற கதம்ப கலைடோஸ்கோபிக்
உணர்ச்சிகள் தானே வாழ்க்கை.
இந்தப்படம்
நன்றாகவே நம்மை
தோலுரிக்கிறது.
அந்த "பச்சை ஜட்டி" ஜோக்குகள்
நம்மை பச்சையாகவே
மூக்கை உடைக்கின்றன.
இயக்குநர் இப்படத்தின்
இதயத்துடிப்பு.
அவர் ஆளுகை அபாரம்.
டிவி ஊடகங்கள் என்பது
ஒரு சவ்வூடு பரவலாய்
சமுதாயத்தின்
உள் துடிப்புகளை
அதன் கங்கு கண்களை
இயல்பாய் காட்டாமல்
ஹிட் ரேட்டை உயர்த்தும்
பரபரப்பை மட்டும் 
சாணி பூசுவது போல்
அலங்கோலம் ஆக்கும்
வெற்று ஆரவாரத்தை நன்றாகவே
காட்டுகிறது படம்.
 இயக்குநர்
ஆயிரம் ஜெயகாந்தன் பேனாக்களை
ஒன்றாய் குவித்துக்கொண்டு
அக்கினிப்பிழம்பை
மெல்லிய தேன் வருடல் போல்
நமக்கு கொடுத்திருக்கிறார்.
தேன் தானே என்று
நக்கிப்பார்த்தால்
நாம் பஸ்பம் தான்.
நம் மனசாட்சி கொழுந்து விட்டு எரிகிறது.
அருவியோ
கொட்டிக்கொண்டே இருக்கிறாள்.
ஆனால்
அது நிச்சயம் கண்ணீர் அல்ல.

=============================================================





1 கருத்து:

Unknown சொன்னது…

அருமை..அருமை.அனைவராலும் கொண்டாட பட வேண்டியவள் அருவி.

கருத்துரையிடுக