வியாழன், 28 டிசம்பர், 2017

நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்.

நலம் தரும் சொல்லே நாராயணா எனும் நாமம்.
=====================================================ருத்ரா

ஆம்.
வேதாந்திகள் மூளைக்காட்டுக்குள்
திசைகளை தின்று விட்ட‌
அந்த அடர்ந்து காட்டுக்குள்
சிக்கித்திணறி
மாய்ந்து கிடந்தபோது
நாராயணன் எனும்
மனிதன்
நாராயணன் எனும்
இன்னொரு மனிதனுக்குள்
புகுந்து
அவன் கண்ணீரில்
அவன் சிந்தும் வியர்வைகளில்
ரத்தங்களில்தோய்ந்து
பிரபஞ்ச உயிர்மை என்ற‌
"போஸான் அல்லது ஃபெர்மியான்"களின்
வெள்ளத்தில்
நீந்திக்களிப்பதே அது.
இதில்
நான்கு வர்ணம் ஐந்து வர்ணம்
என்று
வரப்புகட்டும்
வடிகட்டிய முட்டாள்தனங்கள்
எரிந்து நாசமாகுவதன் ஒளியே
ஒரு சொர்க்கவாசலுக்கு
வெளிச்சம் காட்டும்.
நரன்+அயணம்..
மனிதனில் வெளிப்படு.
மனிதனில் வாழ்ந்திரு.
மனிதமே உன்
மூச்சுக்காற்று.
பாம்புப்படுக்கையல்ல அது!
நந்தனார்களின்
கீழவெண்மணியில்
கருகிப்போன‌
அந்த மனிதங்களின்
அடி உரத்தில்
மின்னல் பயிர்களாய்
வெளிச்ச சிந்தனைகளை
மகசூல் ஆக்கித்தரும்
அந்த சேற்றுமண் இதயங்களில்
நலம் தரும் சொல்லாய்
அந்த "மானிட ஆற்றலை"
கண்டு கொள்வதே
ஞானத்தின் ஞானம்.
அதை
இன்னும் சிந்தனையின்
படிக்கட்டுகளில் ஏறி
தரிசனம் செய்யாதவர்கள்
ஒரு சொர்க்கவாசல் வழியே
நரகம்
நோக்கியே நகர்கிறார்கள்.

=======================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக