புதன், 27 டிசம்பர், 2017

நடுகல் பீலியும் நார்அரி கலமும்


நடுகல் பீலியும் நார்அரி கலமும்
===============================================ருத்ரா

நடுகல் பீலியும் நார்அரி கலமும்
நுரையத் தரூஉம் நறவக் காட்சியான்
வேட்டுவன் யான் கூற்றம் கொண்டு
போயினும் ஓர் ஊழ்  வந்து மீட்டிய காலை
விண்ணின் இழிந்து ஓர் உயிருள் புகு தர
வேந்துகடன் ஆற்றும் நசைமிக்கூர‌
அகலம் ஆயிரம் அம்புகள் துளைக்க‌
வெண்ணிப்பறந்தலை வீழ்படுத்தாங்கு
விண்ணும் வெளியும் பரந்தேன் மன்னே!
என்னே பாழ் இது? ஈனப்படுகுழி
வீழ்ந்தார் ஈண்டு. சிறைய படர்ந்த‌
சிலம்பும் புலம்பும்.எவன்செயும்?
இணரிடை ஊரும் அம்புல் எறும்பாய்
மீள் தர ஆங்கு எவ்விடையாயினும்
தோற்றிடும்  யான் நம் அருமைச்செம்மொழி
காத்திடும் வல்லரண் படைகொடு கிளர்பு
எத்துணை வரினும் அமர்கடாம் உய்த்து
வெல்குவன்  வெல்குவன் அதன்கண்
 உருகெழு பிறப்பின் மண்சுவை தமிழ்ச்சுவை
நனிகூர் களிகொள யாண்டு ஒருநாள்
மீள்குவன் மீள்குவன் காண்மின் மன்னே.

=====================================================

வீரம் செறிந்த மன்னர்கள் போரில் இறந்த பின் அவர்களுக்கு
நடுகல் இட்டு மலர்கள் சூடி மயிற்பீலி அணிவித்து மதுவும் படைத்து
நினைவு கூர்வதுண்டு.அதைக்குறித்து அருமையானதொரு பாடல்
படித்தேன். "அதியமான் நெடுமான் அஞ்சி"யின் நடுகல் பற்றி மனம் வெதும்பி ஔவையார் பாடியது. அதில்
"நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறுகலம்..." (புறம் 232)
என்ற வரிகள் மிகவும் நுட்பமும் அழகும் செறிந்து இருப்பதாக எனக்குப்பட்டன.அதன் உந்துதலில் உடனே நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை தான் மேலே நான் எழுதியிருக்கும் பாடல்.
இது நம் தமிழின் வீழ்ச்சிகண்டு மனம் வெதும்பி ஒரு மன்னன்
மறுபிறவி எடுத்தாவது அது எறும்பின் பிறவியாக இருந்தாலும் சரி
தமிழ் மண்ணைக்காப்பேன் என்று புறநானூற்று வீரம் கொப்பளிக்க‌
அவன் கூறுவது போல் எழுதப்பட்ட பாடல்.

(இதன் விரிவான பொழிப்புரை தொடரும்)

===================================================ருத்ரா
27.12.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக