ஞாயிறு, 10 டிசம்பர், 2017

குறையொன்றுமில்லை கண்ணா!

குறையொன்றுமில்லை கண்ணா!
===================================ருத்ரா இ பரமசிவன்

"குறையொன்றும் இல்லை கண்ணா"

வழக்கம்போல் நாங்கள்
எருமை மாடுகள் மேய்க்கின்றோம்.
சாணி குவித்து
சுவரில் அசோக சக்கரங்கள் போல‌
வறட்டி தட்டுகின்றோம்.
சாணி நாற்றமே எங்கள்
சாம்பிராணி பத்தி வாசனைகள்.
சுரண்டுபவர்கள்
சுருதி குறையாமல்
சுத்த "வர்ணமெட்டில்" பாட்டு பாடி
சுரண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மலைகள் காணவில்லை
கிரானைட்டுகளாக்கி
தின்று தீர்த்து ஏப்பம் இடுகிறார்கள்.
ஆறுகள் காணவில்லை.
தண்ணீர் எல்லாம் கேன்களுக்குள்.
இந்த கொள்ளைக்காரர்களின் வீடுகளில்
காசு மழை.
கரன்சி வெள்ளம்.
பொறியியல் மருத்துவக்கல்லூரிகள் எல்லாம்
லட்சம் லட்சம் லட்சங்களாய்
பணம் தின்னும் முதலைகளின்
பெரிய பெரிய கிட்டங்கிகளாகின.
ஆற்றைச்சுரண்டும் மணல் லாரிகள்
கருப்புப்பண சுரங்கங்கள்.
கண்ணுக்குத்தெரியாத ஸ்விஸ் பேங்குகள்.
அஞ்சோ பத்தோ
கிடைக்கிறத வாங்கி கிட்டு
எங்களையே அடிமாடுகளாய் ஆக்கி
காத்து நிக்கிறோம்
அடுத்த தேர்தல் கசாப்புக்கு.
மற்றபடி
குறையொண்ணுமில்லை கண்ணா!
அவர்கள் வீட்டில்
கிருஷ்ண ஜயந்தி பட்சணங்களுக்கும்
குறையொன்றுமில்லை கோவிந்தா !
கண்ணா! மணி வண்ணா!
உன் யமுனா நதி தீரமும்
இந்தியாவின் மொத்த சாக்கடையாய்
கூவத்து நாற்றத்துடன்
கூக்குரல் இட்டு குப்பைகளோடு
பஜனை செய்த உன்
பக்தர்களால் மாசு பட்டு போனதே!
இந்த "கம்சர்களே" உன் "கீதையை"
இங்கு எழுதுகின்றார்களே கண்ணா.

"குறையொன்றும்....."

அதற்கு மேல் கீதம் கேட்க முடியவில்லையே!
நீல வண்ணக்கண்ணா!
உன் புல்லாங்குழல் கூட அடைத்துக்கொண்டதே
அந்த சாக்கடையால் கண்ணா!

=======================================================
26.08.2016ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக