செவ்வாய், 5 டிசம்பர், 2017

மெரினாவில் ஒரு கருங்கடல்



மெரினாவில் ஒரு கருங்கடல்
============================================ருத்ரா

அம்மா
உனக்கு
கருஞ்சட்டைகளில்
ஒரு கண்ணீர்க்கடல்
அலையடித்து வருகிறது.
உங்கள் இதயத்தை
தங்கள் இதயத்தில் ஏந்தி
உங்கள் துடிப்புகளை
தங்கள் மூசசுகளில் ஏந்தி
சோகத்தின் கருங்கடல்
அலையடித்து வருகிறது.

ஆம்
அப்படி ஒரு தோற்றம்
அரங்கேறிக்  கொண்டிருக்கிறது.
இவை கால் முளைத்த
சின்ன சின்ன "கட்  அவுட்டு"கள்.


நூறுஆண்டுகள்
உன்  ஆட்சி என்று
ஒரு பஞ்சாங்கத்தை
ஆணி அடித்துவிட்டுப்
போய் விட்டாய்.
அதிலிருந்து
ஆளுக்கு ஆள்
ஆணிகள்
அடிக்கவும் புடுங்கவுமாய் தான்
இருக்கிறார்கள்.
"வடிவேலுவின்"
ஒரு அலட்டல் நகைச்சுவை
அமுக்கமாய்
எங்களுக்கு கேட்டுக்கொண்டு தான்
இருக்கிறது.

மூன்றரை ஆண்டுகள்
மூச்சுப்பிடிக்கவே
இவர்களுக்கு
டெல்லியின்  ஆக்சிஜன் சிலிண்டர்
வேண்டியிருக்கிறது.
அண்ணா நாமம் வாழ்க
என்றவர்கள்
"மோடியிருக்க பயமேன்?"
என்கிறார்கள்.
எம் ஜி ஆர்க்கு நூற்றாண்டு விழாக்கள்
என்பது
வெறும் கட் அவுட் தோரணங்களின்
"காண்ட்ராக்டு"கள் தானா?

வெறும் இரண்டு இலை  என்பது
அடையாளசின்னமே .
அதுவே இவர்களுக்கு
கறி சோறு விருந்து
படை க்கப்போவதாய்
பட்டாசு கொளுத்துகிறார்கள்.

அம்மா
அன்று நீ இறந்து விட்டாய் என்று
கூடி நின்று கும்பலாய்
மூக்கைச்சிந்தி அழுது புலம்பி
ஒப்பாரி வைத்தவர்கள்
இன்று
உன் சாவு பற்றிய
விசாரணை கமிஷன்
ஒன்றை
சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல்  விளையாட்டாய்
உன் மரணத்தின்
பொம்மையையே
சுமந்து காட்டியவர்கள் தானே!

எது நிஜம்? எது நிழல் ?
என்று தெரியாமலேயே
அந்த மர்ம உருவத்தின் முன்
ஒரு புயலில்
நெடுஞ்சாண் கிடையாய் விழும்
வாழை மரங்கள் போல் விழுந்து
தன் பதவிகளை
மடியில் கட்டிக்கொண்ட பின்
அந்த நிழலின் நிழலுக்கே
மகுடம் சூட்டினார்கள்.
இன்னும் ஒரு நிழலாய் ஒன்று
டெல்லியிலிருந்து
நீண்டு வந்து
தமிழ் நாட்டின்
இன மாண்பையே
இம்சை படுத்தியபோது
"இருபத்தி ஒண்ணாம் புலிகேசிகள்"போல்
காமெடி பண்ணினார்கள்.
சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் அந்த
காந்த சவுக்கு அங்கிருந்து
கொடுக்கிய போதெல்லாம்
தோப்புக்கரணம் போட்டார்கள்.

இன்று
உன் நினைவிடத்தின் முன்
கறுப்புக் காக்காய்கள்
நெருப்பு கமழும்
தமிழனின் "இருப்பையே"
கேலிக்கூத்து ஆக்கிக்கொண்டிருக்கின்றன.
உனக்கு
ஒரு ஆன்மா இருப்பது
உண்மையென்றால்
இவர்களை விரட்டுவதற்காகவாது
ஒரு முறை
இங்கு எழுந்து வா!

=======================================================
05.12.2017








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக