சனி, 30 டிசம்பர், 2017

ரஜனி ரஜனி தான்

ரஜனி ரஜனி தான்
==========================================ருத்ரா

அவர் சொல்லும் வாக்கும்
இன்னும்
கைதட்டல் மழையில்
விசில் பிரளயங்களில்
ரசிகர்களின் உலகத்தில்
கொடி தூக்கி நிற்கிறது!
ஆனால்
இப்போது பூனை
பையிலிருந்து வெளியேறிவிட்டது.
அந்த காலம் வரும்
அப்போது ஆண்டவன் சொல்வான்
என்றார்.
இப்போது
"காலா"வுக்குப்பிறகு
வரும் ஆண்டவன் சொல் தான் அது
என்றும்
அது பலப்பல ஆண்டவன்களின்
சொல்களில் இருந்து
வடிகட்டி வரும்
சொல் தான் என்றும்
சொல்லியே விட்டார்.
பாக்ஸ் ஆஃபீஸ்களும்
ஏரியா விற்றுத்தீர்தல்களும் தான்
(எப்போதோ விற்றுத்தீர்ந்திருக்கும்
என்று
அந்த ஆண்டவன்களுக்கு
தெரியுமோ தெரியாதோ
என்பது
அவருக்கு நிச்சயமாய் தெரியாது.)
அவர் கையெடுத்துக்கும்பிட்டுக்காட்டும்
ஆண்டவன்!
அரசியல் பற்றி இனிமேல் தான்
அவர் ஆனா ஆவன்னா படிக்கப்போகிறார்
என்பதை
கண்டிப்பாய்
நாம் நம்புவோமாக!
ஏனெனில்
குறுக்குவழி அரசியல் பற்றி
கடுமையாய் கூறிவிட்டார்.
அதனால்
ஆற்றுக்கு குறுக்கே
கட்டியிருக்கும் பாலம் கூட‌
அவருக்கு
மிகவும் உறுத்தலாய் தோன்றி
ஆற்றின் கரை வழியே தான்
நடப்பார்.நடப்பார்.
அங்குலம் அங்குலமாய் நடப்பார்.
அப்போதும்
அவர் அரசியலின்
அந்த கரைக்கு எப்படி போவது
என்று
ரசிகர்களுடன்
ஃபோட்டோ எடுத்துக்கொண்டே
வினாக்கள் எழுப்புவார்!
ஆத்மீகம் சுடரச்செய்.
மதத்தை மற்றவரிடம் திணிக்காதே.
இவருக்கு இவரது குரு சொன்ன‌
மணியான கருத்துகள்.
டெல்லிக்காரர்கள் இதை நோக்குவார்களா?
இவர் சினிமா வியாபரம் செய்தாலும்
சில படங்களின் நஷ்டத்தை
இவர் ஏற்றதே இவரது ஆத்மீகத்துவமான‌
கண்ணியம்.
அதனால் ரசிகர்கள் மிக உயரமான‌
முதலமைச்சர் நாற்காலியை அல்லவா
இவருக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.
இருப்பினும்
தமிழர்களின் உயிரான பிரச்னைகளுக்கு
இவரது யோக முத்திரைகள்
தீர்வு சொல்லுமா என்பதும்
ஒரு பில்லியன் டாலர் கேள்வி தான்.
கனவு தான் சந்தோஷம் என்கிறார்.
அது புலித்தோல் ஆசனத்தின் தியானம்.
அரசியலின்
நனவு எனும் புலிச்சவாரி செய்ய‌
மறுபடியும் "சங்கரை"த்தான்
கூப்பிடவேண்டும்.."க்ராஃபிக்ஸ்" செய்ய.
இருப்பினும் இந்த மக்களின் மனசு பூராவும்
ரஜனி தான்.
ரஜனி ரஜனி தான்.
காலண்டரின்
முப்பதாம் தாள் மட்டுமே
கிழிக்கப்பட்டிருக்கிறது.
ஓ! அன்பான ரசிகர்களே!
அன்பிலும் அன்பான‌
உங்கள் ரஜனி ரசத்தின்
கடைசிச்சொட்டுக்கள் அந்த‌
முப்ப‌த்தொன்றாம் தாளிலும்
ஒட்டிக்கொண்டு
துளிர்த்து இருக்கின்றன.
அவர் உருட்டும்
அந்த கடைசி பகடைகளில்
பூகம்பம் தோன்றுமா?
இல்லை
பூக்கள் தான் (காதில்)
சூட்டிக்கொள்ளவேண்டுமா?
விடியட்டும் பார்க்கலாம்.
மர்மம் இல்லை.திகில் இல்லை.
இவரது வினோத
"பிக் பாஸ்"விளையாட்டில்!
ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என‌
பாட்டு முழங்கும்
பூசணிக்காய்கள் மட்டுமே
உடைகின்றன.

================================================================











2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

ஆற்றின் கரையோரமாய்தான் நடப்பார்...

உங்களின் நையாண்டியை இரசித்தேன்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மக்கள் ஜனநாயகம் கானல்நீர் ஆகிப்போனதில் அரசியல் பாதையின் குறுக்குவழியே தேர்தல் தான்.உங்கள் ரசிப்புக்கு நன்றி
கில்லர்ஜி அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக