புதன், 27 டிசம்பர், 2017

மீண்டும் ரஜனி

மீண்டும் ரஜனி
============================================ருத்ரா

எங்கள் அன்பான ரஜனி அவர்களே!
நீங்கள் இன்னும்
"டார்ஸான்" போன்ற‌
காமிக் புத்தகங்களின்
சூபர் ஸ்டார் ஆகத்தானே
எங்களிடையே
வலம் வருகிறீர்கள்.
உங்களை ரசிக்கும் போது
எல்லோருமே...
எழுபது எண்பது வயதுக்காரர்கள் கூட‌
ஏழு எட்டு வயதுடைய‌
உற்சாகத்தின் பொங்குமாங்கடல்
ஆகிவிடுகிறார்கள்.
ஆனால் இந்த‌
அம்புலிமாமாக்காடுகளிலிருந்து
எப்போது
மீண்டு வரப்போகிறீர்கள்?
காலா என்றாலும் சரி
கபாலி என்றாலும் சரி
ஏன் கணினியுக வீரன்களாய்
ஜனித்து வரும்
எந்திரன் மற்றும் அதன் வெர்ஷன்
2.0 என்று
எப்படி வந்தாலும் சரி
உங்கள் "பஞ்ச்" டயலாக் ஆயுதங்களில்
இந்த பருப்பு ஒன்றும்
வேகாதே!
திரைஉலகத்தின்
உங்கள் கருப்பு மீசையோ
அல்லது
கருப்பு வெளுப்பு மீசை தாடியோ
எங்களை
இன்னும் இளமை துடிப்பதாய்
இன்னும் அந்த‌
கானல் நீர் ஆற்றுக்குள் தான்
இழுத்துப்பொகிறது.
பக்கத்தில்
ஒரு தமிழ் அருவியை
நீங்கள் வைத்துக்கொண்டாலும்
அது நம் திராவிட ஊற்றுக்கண்ணை
(ஏன் நீங்களும் கன்னடத்திராவிடன் தானே)
அவித்து விடலாம்.
நீங்கள் தமிழக எல்லையிலிருந்து தான்
எங்கள் மூவேந்தர் பண்பாட்டோடு
மூண்டெழுந்து வந்திருக்கிறீகள்
என்பதையும் நம்புகிறோம்.
சொந்த சகோதரர்கள்
வாய்க்கால் வரப்புச்சண்டைக்கு
வெட்டு குத்து வரைக்கும்
போவது போலத்தான்
காவிரிச்சண்டையும்.
அது காவிரித்து பூவிரித்து
கரை விரித்து வந்ததெல்லாம்
தமிழன் உழைப்பின் ரத்தத்தில் தான்.
அதற்காக அது இன்றைய‌
தமிழனின் தாகம் தீர்க்கும்
தனிஉடைமை என்று இவர்கள்
கேட்கவே இல்லை.
திராவிடச்சகோரத்துவம் தான்
அதன் இன்றைய தண்ணீர் வடிவம்.
இந்தப்புரிதலில்
ஓட்டைகள் எப்படி வந்தன?
அவை எப்படி அடைக்கப்படவேண்டும்
என்பதே இன்றைய‌
உயிரான பிரச்னை.
இதற்கு அம்புகளும் கோடரிகளும்
தேவையில்லை.
அணை என்ற‌ பெயரில்
காவிரியின் குறுக்காக வைக்கப்படும்
ஒவ்வொரு கல்லும்
திராவிடசிமிண்டு பூசப்பட வேண்டும்.
திராவிடச்சகோதரர்களை
ஒன்று படுத்தும்
தமிழனின் கையோடு
உங்கள் கைகள்
கை கோர்த்து கொள்ளட்டும்.
திராவிடம் எனும் அடி நெருப்பு
ஒரு ஒற்றுமையின்
ஊழி நெருப்பும்
அதில் தமிழ் எனும்
ஆழி நெருப்பும் சங்கமிப்பது தானே.
உங்கள்ஆத்மீகம் கூட‌
தமிழனின்
சிந்துவெளிப்படுகையிலிருந்து தான்
சிந்தனைப்பொறிகளை
சிதற விட்டிருக்கிறது.
அந்தப்பொறிகளை வைத்து
சாதி மத வேறுபாடுகள் களைந்த‌
ஒரு மனித நீதிச்சுடருக்கு
உங்கள் ஆத்மீகம் கூட‌
ஒட்டு மொத்த சமுதாயத்தின்
மனசாட்சி எனும்
அக்கினிக்குழம்புக்குள்
முத்துக்குளித்து
ஒரு விடியலை கொண்டுவரும்
என்று
இவர்கள் உங்களை நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையின் உதயமாய்
உருவெடுத்து வாருங்கள்.
இந்துத்வா என்பதற்கும்
இந்து என்பதற்கும்
உள்ள இடைவெளி என்ன என்று
உங்களுக்கு புரிந்திருக்குமே.
வெறியூட்டும் மண்டைஓடுகளுக்கு
குங்குமம் பூசி
கும்பாபிஷேகம் நடத்துவது அல்ல‌
தமிழனின் ஆத்மீகம்.
அடிப்படையில் அது
தமிழ் ஒளியில் ஒரு
உலக மானிடம் பூக்க வைப்பதே ஆகும்.
இந்த சுடரேந்தியாக‌
எங்களிடையே வலம் வரும் நாளே
உங்கள் திருநாள்.
எங்கள் பெருநாள்.
அது வரை
ரசிகர்களோடு
ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும்
உங்கள் பொம்மை விளையாட்டு என்பதும்
எங்களுக்கு இன்னொரு சினிமா தான்.
திரையின் நட்சத்திரமாக‌
ஜிகினாப் பூவேந்தி
நீங்கள் வருவதைவிட‌
தரையின்
கண்ணீர்ப்பூவாக‌
வியர்வையின் மகரந்தமாக‌
எங்களோடு எங்களாக‌
நீக்கள் உலா வருவதே
எங்கள் உவப்பு.
எங்கள் உயிர்ப்பு.
எங்கள் ஈர்ப்பு.
வருக வருக‌
எங்கள் இதயம் நுழைந்து
ஒரு உதயம் காட்ட‌
நீங்கள் வருக வருகவே!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================================================



2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

தமிழருவியை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
இவ்வளவு கேவலமான வாழ்க்கையா ?

உங்களின் கவிதைகளை எல்லாம் எந்த ரசிகனும் படிக்க மாட்டான் ஐயா. படித்தாலும் அவனுக்கு புரியாது புரிந்தவன் ரஜினிக்கு மட்டுமல்ல எவனுக்கும் ரசிகனாக இருக்க மாட்டான்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

அன்புள்ள திரு.கில்லர்ஜி அவர்களே

மிகவும் நுணுக்கமாய் ஆழ்ந்து ரசித்த என் கவிதையைப்பற்றிய‌
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக